032-ThiruVannPurushothamam


Thiru Vann Purushothamam ( Sri Purushothama Perumal Temple )

Azhwar Paasuram Count
திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி 10
Total 10

1   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 4.2.1

** கம்ப மாகட லடைத்திலங் கைக்குமன் கதிர்முடி யவைபத்தும்

அம்பி னாலறுத்து * அரசவன் தம்பிக்கு அளித்தவ னுறைகோயில் *

செம்ப லாநிரை செண்பகம் மாதவி சூதகம் வாழைகள்சூழ் *

வம்பு லாம்கமு கோங்கிய நாங்கூர் வண்புரு டோத்தமமே


2   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 4.2.2

பல்ல வந்திகழ் பூங்கடம் பேறியக் காளியன் பணவரங்கில் *

ஒல்லை வந்துறப் பாய்ந்தரு நடஞ்செய்த உம்பர்க்கோ னுறைகோயில் *

நல்ல வெந்தழல் மூன்றுநால் வேதமை வேள்வியோ டாறங்கம் *

வல்ல வந்தணர் மல்கிய நாங்கூர் வண்புரு டோத்தமமே


3   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 4.2.3

அண்ட ரானவர் வானவர் கோனுக்கென் றமைத்தசோ றதுவெல்லாம்

உண்டு * கோநிரை மேய்த்தவை காத்தவன் உகந்தினி துறைகோயில் *

கொண்ட லார்முழ வில்குளிர் வார்பொழில் குலமயில் நடமாட *

வண்டு தானிசை பாடிடு நாங்கூர் வண்புரு டோத்தமமே


4   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 4.2.4

பருங்கை யானையின் கொம்பினைப் பறித்ததன் பாகனைச் சாடிப்புக்கு *

ஒறுங்க மல்லரைக் கொன்றுபின் கஞ்சனை உதைத்தவ னுறைகோயில் *

கரும்பினூடுயர் சாலிகள் விளைதரு கழனியில் மலிவாவி *

மருங்கெ லாம்பொழி லோங்கிய நாங்கூர் வண்புரு டோத்தமமே


5   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 4.2.5

சாடு போய்விழத் தாள்நிமிர்த் தீசன்தன் படையொடுங் கிளையோடும்

ஓட * வாணனை யாயிரந் தோள்களும் துணித்தவ னுறைகோயில் *

ஆடு வான்கொடி யகல்விசும் பணவிப்போய்ப் பகலவ னொளிமறைக்கும் *

மாட மாளிகை சூழ்தரு நாங்கூர் வண்புரு டோத்தமமே


6   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 4.2.6

அங்கை யாலடி மூன்றுநீ ரேற்றயன் அலர்கொடு தொழுதேத்த *

கங்கை போதரக் கால்நிமிர்த் தருளிய கண்ணன்வந் துறைகோயில் *

கொங்கை கோங்கவை காட்டவாய் குமுதங்கள் காட்டமா பதுமங்கள் *

மங்கை மார்முகம் காட்டிடு நாங்கூர் வண்புரு டோத்தமமே


7   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 4.2.7

உளைய வொண்டிறல் பொன்பெய ரோன்தன துரம்பிளந் துதிரத்தை

அளையும் * வெஞ்சினத் தரிபரி கீறிய அப்பன்வந் துறைகோயில் *

இளைய மங்கைய ரிணையடிச் சிலம்பினோ டெழில்கொள்பந் தடிப்போர் * கை

வளையில் நின்றொலி மல்கிய நாங்கூர் வண்புரு டோத்தமமே


8   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 4.2.8

வாளை யார்தடந் கண்ணுமை பங்கன்வன் சாபமற் றதுநீங்க *

மூளை யார்சிரத் தையமுன் அளித்தவெம் முகில்வண்ண னுறைகோயில் *

பாளை வான்கமு கூடுயர் தெங்கின்வன் பழம்விழ வெருவிப்போய் *

வாளை பாய்தடம் சூழ்தரு நாங்கூர் வண்புரு டோத்தமமே


9   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 4.2.9

இந்து வார்சடை யீசனைப் பயந்தநான் முகனைத்தன் னெழிலாரும் *

உந்தி மாமலர் மீமிசைப் படைத்தவன் உகந்தினி துறைகோயில் *

குந்தி வாழையின் கொழுங்கனி கர்ந்துதன் குருளையைத் தழுவிப்போய் *

மந்தி மாம்பணை மேல்வைகு நாங்கூர் வண்புரு டோத்தமமே


10   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 4.2.10

** மண்ணு ளார்புகழ் வேதியர் நாங்கூர் வண்புரு டோத்தமத்துள் *

அண்ணல் சேவடிக் கீழடைந் துய்ந்தவன் ஆலிமன் அருள்மாரி *

பண்ணு ளார்தரப் பாடிய பாடலிப் பத்தும்வல் லார் * உலகில்

எண்ணி லாதபே ரின்பமுற் றிமையவ ரோடும் கூடுவரே