Thiruppavai-TA


திருப்பாவை

   ஆண்டாள் – தனியன்கள்
   
   திருப்பாவை – Full Version
   

Ready Reckoner


1   திருப்பாவை-01

மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்

நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்

சீர்மல்கும் ஆய்ப்பாடி செல்வச் சிறுமீர்காள்

கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்

ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்

கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல்முகத்தான்

நாரா யணனே நமக்கே பறைதருவான்

பாரோர் புகழப் படிந்தேலோ ரெம்பாவாய்

   Verse
   
   Meaning
   

2   திருப்பாவை-02

வையத்து வாழ்வீர்காள் நாமும் நம்பாவைக்கு

செய்யுங் கிரிசைகள் கேளீரோ பாற்கடலுள்

பையத் துயின்ற பரமன் அடிபாடி

நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலை நீராடி

மையிட் டெழுதோம் மலரிட்டு நாம் முடியோம்

செய்யா தனசெய்யோம் தீக்குறளைச் சென்றோதோம்

ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி

உய்யுமா றெண்ணி உகந்தேலோ ரெம்பாவாய்

   Verse
   
   Meaning
   

3   திருப்பாவை-03

ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி

நாங்கள் நம் பாவைக்கு சாற்றிநீர் ஆடினால்

தீங்கின்றி நாடெல்லாம் திங்கள்மும் மாரிபெய்து

ஓங்கு பெருஞ்செந்நெ லூடு கயல் உகள

பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்ப

தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலைபற்றி

வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்

நீங்காத செல்வம் நிறைந்தேலோ ரெம்பாவாய்

   Verse
   
   Meaning
   

4   திருப்பாவை-04

ஆழி மழைக்கண்ணா ஒன்று நீ கைகரவேல்

ஆழியுள் புக்கு முகந்துகொ டார்த்தேறி

ஊழி முதல்வன் உருவம்போல் மெய்கறுத்து

பாழியந் தோளுடை பற்பநா பன்கையில்

ஆழிபோல் மின்னி வலம்புரிபோல் நின்றதிர்ந்து

தாழாதே சார்ங்கம் உதைத்த சரமழைபோல்

வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்

மார்கழி நீராட மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்

   Verse
   
   Meaning
   

5   திருப்பாவை-05

மாயனை மன்னு வடமதுரை மைந்தனை

தூய பெருநீர் யமுனைத் துறைவனை

ஆயர் குலத்தினில் தோன்றும் அணிவிளக்கை

தாயைக் குடல்விளக்கம் செய்த தாமோதரனை

தூயோம்ஆய் வந்துநாம் தூமலர் தூவித்தொழுது

வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க

போய பிழையும் புகுதருவான் நின்றனவும்

தீயினில் தூசுஆகும் செப்பேலோ ரெம்பாவாய்

   Verse
   
   Meaning
   

6   திருப்பாவை-06

புள்ளும் சிலம்பினகாண் புள்ளரையன் கோயிலில்

வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ

பிள்ளாய் எழுந்திராய் பேய்முலை நஞ்சுண்டு

கள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சி

வெள்ளத்தரவில் துயில் அமர்ந்த வித்தினை

உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்

மெள்ள எழுந்து அரிஎன்ற பேரரவம்

உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்

   Verse
   
   Meaning
   

7   திருப்பாவை-07

கீசுகீசு என்று எங்கும் ஆனைச்சாத்தன்

கலந்து பேசின பேச்சரவம் கேட்டிலையோ பேய்ப்பெண்ணே

காசும் பிறப்பும் கலகலப்பக் கைபேர்த்து

வாச நறும்குழல் ஆய்ச்சியர் மத்தினால்

ஓசை படுத்த தயிரரவம் கேட்டிலையோ

நாயகப் பெண்பிள்ளாய் நாரா யணன் மூர்த்தி

கேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ

தேசமுடையாய் திறவேலோர் எம்பாவாய்

   Verse
   
   Meaning
   

8   திருப்பாவை-08

கீழ்வானம் வெள்ளென்று எருமை சிறுவீடு

மேய்வான் பரந்தனகாண் மிக்குள்ள பிள்ளைகளும்

போவான் போகின்றாரைப் போகாமல்காத்து உன்னைக்

கூவுவான் வந்துநின்றோம் * கோதுகலம் உடைய

பாவாய் எழுந்திராய் பாடிப் பறைகொண்டு

மாவாய் பிளந்தானை மல்லரை மாட்டிய

தேவாதி தேவனைச் சென்றுநாம் சேவித்தால்

ஆவாவென்று ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய்

   Verse
   
   Meaning
   

9   திருப்பாவை-09

தூமணி மாடத்து சுற்றும் விளக்கெரிய

தூபம் கமழத் துயிலணைமேல் கண்வளரும்

மாமான் மகளே மணிக்கதவம் தாழ்திறவாய்

மாமீர் அவளை எழுப்பீரோ உன்மகள்தான்

ஊமையோ அன்றி செவிடோ அனந்தலோ

ஏமப் பெருந்துயில் மந்திரப் பட்டாளோ

மாமாயன் மாதவன் வைகுந்தன் என்றென்று

நாமம் பலவும் நவின்றேலோர் எம்பாவாய்

   Verse
   
   Meaning
   

10   திருப்பாவை-10

நோற்று சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்

மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார்

நாற்ற துழாய்முடி நாராயணன் நம்மால்

போற்ற பறைதரும் புண்ணியனால் பண்டு ஒருநாள்

கூற்றத்தின் வாய்வீழ்ந்த கும்பகரணனும்

தோற்றும் உனக்கே பெருந்துயில்தான் தந்தானோ

ஆற்ற அனந்தல் உடையாய் அருங்கலமே

தேற்றமாய் வந்து திறவேலோர் எம்பாவாய்

   Verse
   
   Meaning
   

11   திருப்பாவை-11

கற்றுக் கறவைக் கணங்கள் பலகறந்து

செற்றார் திறலழியச் சென்று செருச்செய்யும்

குற்றம் ஒன்றில்லாத கோவலர்த்தம் பொற்கொடியே

புற்றுஅரவு அல்குல் புனமயிலே போதராய்

சுற்றத்து தோழிமார் எல்லாரும் வந்து நின்

முற்றம் புகுந்து முகில்வண்ணன் பேர்பாட

சிற்றாதே பேசாதே செல்வபெண்டாட்டி நீ

எற்றுக்கு உறங்கும் பொருளேலோர் எம்பாவாய்

   Verse
   
   Meaning
   

12   திருப்பாவை-12

கனைத்து இளம்கற்றெருமை கன்றுக்கு இரங்கி

நினைத்து முலைவழியே நின்றுபால் சோர

நனைத்துஇல்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்

பனித்தலை வீழ நின் வாசற் கடைபற்றி

சினத்தினால் தென்இலங்கைக் கோமானைச் செற்ற

மனத்துக்கு இனியானைப் பாடவும் நீ வாய்திறவாய்

இனித்தான் எழுந்திராய் ஈதென்ன பேருறக்கம்

அனைத்து இல்லத் தாரும் அறிந்தேலோர் எம்பாவாய்

   Verse
   
   Meaning
   

13   திருப்பாவை-13

புள்ளின்வாய் கீண்டானைப் பொல்லா அரக்கனை

கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப்போய்

பிள்ளைகள் எல்லாரும் பாவைக்களம் புக்கார்

வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று

புள்ளும் சிலம்பினகாண் போதரிக் கண்ணினாய்

குள்ளக் குளிரக் குடைந்து நீராடாதே

பள்ளிக் கிடத்தியோ பாவாய்நீ நன்நாளால்

கள்ளம் தவிர்ந்து கலந்தேலோர் எம்பாவாய்

   Verse
   
   Meaning
   

14   திருப்பாவை-14

உங்கள் புழக்கடைத் தோட்டத்து வாவியுள்

செங்கழுநீர் வாய்நெகிழ்ந்து ஆம்பல்வாய் கூம்பினகாண்

செங்கல் பொடிக்கூரை வெண்பல் தவத்தவர்

தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போதந்தார்

எங்களை முன்னம் எழுப்புவான் வாய்பேசும்

நங்காய் எழுந்திராய் நாணாதாய் நாவுடையாய்

சங்கோடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்

பங்கயக் கண்ணானைப் பாடேலோர் எம்பாவாய்

   Verse
   
   Meaning
   

15   திருப்பாவை-15

எல்லே இளங்கிளியே இன்னம் உறங்குதியோ

சில்என்று அழையேன்மின் நங்கையீர் போதருகின்றேன்

வல்லைஉன் கட்டுரைகள் பண்டேஉன் வாயறிதும்

வல்லீர்கள் நீங்களே நானேதான் ஆயிடுக

ஒல்லைநீ போதாய் உனக்கென்ன வேறுடையை

எல்லாரும் போந்தாரோ போந்தார்போந்து எண்ணிக்கொள்

வல்ஆனை கொன்றானை மாற்றாரை மாற்றழிக்க

வல்லானை மாயனைப் பாடேலோர் எம்பாவாய்

   Verse
   
   Meaning
   

16   திருப்பாவை-16

நாயகனாய் நின்ற நந்தகோபன் உடைய

கோயில் காப்பானே கொடித்தோன்றும்

தோரணவாயில் காப்பானே மணிக்கதவம் தாள்திறவாய்

ஆயர் சிறுமியரோ உமக்கு அறைபறை

மாயன் மணிவண்ணன் நென்னலே வாய்நேர்ந்தான்

தூயோமாய் வந்தோம் துயில் எழப் பாடுவான்

வாயால் முன்னம்முன்னம் மாற்றாதே அம்மா நீ

நேய நிலைக்கதவம் நீக்கேலோர் எம்பாவாய்

   Verse
   
   Meaning
   

17   திருப்பாவை-17

அம்பரமே தண்ணீரே சோறே அறம்செய்யும்

எம்பெருமான் நந்தகோபாலா எழுந்திராய்

கொம்பனார்க்கு எல்லாம் கொழுந்தே குலவிளக்கே

எம்பெருமாட்டி யசோதாய் அறிவுறாய்

அம்பரம் ஊடஅறுத்து ஓங்கி உளகுஅளந்த

உம்பர் கோமானே உறங்காது எழுந்திராய்

செம்பொற் கழலடிச் செல்வா பலதேவா

உம்பியும் நீயும் உறங்கேலோர் எம்பாவாய்

   Verse
   
   Meaning
   

18   திருப்பாவை-18

உந்து மதகளிற்றன் ஓடாத தோள்வலியன்

நந்தகோ பாலன் மருமகளே நப்பின்னாய்

கந்தம் கமழும் குழலி கடைதிறவாய்

வந்துஎங்கும் கோழி அழைத்தனகாண் மாதவிப்

பந்தல்மேல் பல்கால் குயிலினங்கள் கூவினகாண்

பந்துஆர் விரலிஉன் மைத்துனன் பேர்பாட

செந்தாமரைக் கையால் சீரார் வளைஒலிப்ப

வந்து திறவாய் மகிழ்ந்தேலோர் எம்பாவாய்

   Verse
   
   Meaning
   

19   திருப்பாவை-19

குத்து விளக்கெரிய கோட்டுக்கால் கட்டில்மேல்

மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேல்ஏறி

கொத்தலர் பூங்குழல் நப்பினை கொங்கைமேல்

வைத்துக் கிடந்த மலர்மார்பா வாய்திறவாய்

மைத்தடம் கண்ணினாய் நீஉன் மணாளனை

எத்தனை போதும் துயிலெழ ஒட்டாய்காண்

எத்தனையேலும் பிரிவுஆற்ற கில்லாயால்

தத்துவம் அன்று தகவேலோர் எம்பாவாய்

   Verse
   
   Meaning
   

20   திருப்பாவை-20

முப்பத்து மூவர் அமரர்க்கு முன்சென்று

கப்பம் தவிர்க்கும் கலியே துயில்எழாய்

செப்பம் உடையாய் திறல்உடையாய் செற்றார்க்கு

வெப்பம் கொடுக்கும் விமலா துயில்எழாய்

செப்பென்ன மென்முலைச் செவ்வாய்ச் சிறுமருங்குல்

நப்பின்னை நங்காய் திருவே துயில்எழாய்

உக்கமும் தட்டொளியும் தந்துஉன் மணாளனை

இப்போதே எம்மை நீராட்டேலோர் எம்பாவாய்

   Verse
   
   Meaning
   

21   திருப்பாவை-21

ஏற்ற கலங்கள் எதிர்பொங்கி மீதளிப்ப

மாற்றாதே பால்சொரியும் வள்ளல் பெரும்பசுக்கள்

ஆற்றப் படைத்தான் மகனே அறிவுறாய்

ஊற்றம் உடையாய் பெரியாய் உலகினில்

தோற்றமாய் நின்ற சுடரே துயில்எழாய்

மாற்றார் உனக்கு வலிதொலைந்துஉன் வாசற்கண்

ஆற்றாது வந்து உன் அடிபணியுமா போலே

போற்றியாம் வந்தோம் புகழ்ந்தேலோர் எம்பாவாய்

   Verse
   
   Meaning
   

22   திருப்பாவை-22

அம்கண்மா ஞாலத்து அரசர் அபிமான

பங்கமாய் வந்துநின் பள்ளிக்கட்டிற்கீழே

சங்கம் இருப்பார்போல் வந்து தலைப்பெய்தோம்

கிங்கிணி வாய்ச்செய்த தாமரைப் பூப்போலே

செங்கண் சிறுச்சிறிதே எம்மேல் விழியாவோ

திங்களும் ஆதித் தியனும் எழுந்தாற்போல்

அம்கண் இரண்டும்கொண்டு எங்கள்மேல் நோக்குதியேல்

எங்கள்மேல் சாபம் இழிந்தேலோர் எம்பாவாய்

   Verse
   
   Meaning
   

23   திருப்பாவை-23

மாரி மலைமுழைஞ்சில் மன்னிக் கிடந்துஉறங்கும்

சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீவிழித்து வேரி

மயிர்பொங்க எப்பாடும் பேர்ந்துஉதறி

மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டு

போதருமா போலேநீ பூவைப்பூ வண்ணா உன்

கோயில்நின்று இங்ஙனே போந்தருளி கோப்புடைய

சீரிய சிங்காசனத்து இருந்து யாம்வந்த

காரியம் ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய்

   Verse
   
   Meaning
   

24   திருப்பாவை-24

அன்று இவ்வுலகம் அளந்தாய் அடிபோற்றி

சென்றங்குத் தென்இலங்கை செற்றாய் திறல்போற்றி

பொன்றச் சகடம் உதைத்தாய் புகழ்போற்றி

கன்று குணிலா எறிந்தாய் கழல்போற்றி

குன்று குடையாய் எடுத்தாய் குணம்போற்றி

வென்று பகைகெடுக்கும் நின்கையில் வேல்போற்றி

என்றென்று உன்சேவகமே ஏத்திப் பறைகொள்வான்

இன்றுயாம் வந்தோம் இரங்கேலோர் எம்பாவாய்

   Verse
   
   Meaning
   

25   திருப்பாவை-25

ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓர் இரவில்

ஒருத்தி மகனாய் ஒளித்து வளர

தரிக்கிலான் ஆகித்தான் தீங்கு நினைந்த

கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில்

நெருப்பென்ன நின்ற நெடுமாலே உன்னை

அருத்தித்து வந்தோம் பறைதருதி யாகில்

திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம்பாடி

வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோர் எம்பாவாய்

   Verse
   
   Meaning
   

26   திருப்பாவை-26

மாலே மணிவண்ணா மார்கழி நீராடுவான்

மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்

ஞாலத்தை எல்லாம் நடுங்க முரல்வன

பாலன்ன வண்ணத்து உன் பாஞ்சசன்னியமே

போல்வன சங்கங்கள் போய்ப்பா டுடையனவே

சாலப் பெரும்பறையே பல்லாண்டு இசைப்பாரே

கோல விளக்கே கொடியே விதானமே

ஆலின் இலையாய் அருளேலோர் எம்பாவாய்

   Verse
   
   Meaning
   

27   திருப்பாவை-27

கூடாரை வெல்லும்சீர் கோவிந்தா உன்தன்னை

பாடிப்பறை கொண்டு யாம்பெறு சம்மானம்

நாடு புகழும் பரிசினால் நன்றாக

சூடகமே தோள்வளையே தோடே செவிப்பூவே

பாடகமே என்றனைய பல்கலனும் யாமணிவோம்

ஆடை உடுப்போம் அதன்பின்னே பாற்சோறு

மூடநெய் பெய்து முழங்கை வழிவார

கூடி யிருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்

   Verse
   
   Meaning
   

28   திருப்பாவை-28

கறவைகள் பின்சென்று கானம்சேர்ந்து உண்போம்

அறிவுஒன்றும் இல்லாத ஆய்க்குலத்து உந்தன்னைப்

பிறவி பெறுந்தனைப் புண்ணியம் யாம்உடையோம்

குறைஒன்றும் இல்லாத கோவிந்தா உந்தன்னோடு

உறவேல் நமக்குஇங்கு ஒழிக்க ஒழியாது

அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உந்தன்னை

சிறுபேர் அழைத்தனவும் சீறி அருளாதே

இறைவாநீ தாராய் பறையேலோர் எம்பாவாய்

   Verse
   
   Meaning
   

29   திருப்பாவை-29

சிற்றம் சிறுகாலே வந்துஉன்னை சேவித்து உன்

பொற்றாமரை அடியே போற்றும் பொருள்கேளாய்

பெற்றம்மேய்த்து உண்ணும் குலத்தில் பிறந்து நீ

குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது

இற்றைப் பறைகொள்வான் அன்றுகாண் கோவிந்தா

எற்றைக்கும் ஏழ்ஏழ் பிறவிக்கும் உன்தன்னோடு

உற்றோமே ஆவோம் உனக்கேநாம் ஆட்செய்வோம்

மற்றைநம் காமங்கள் மாற்றேலோர் எம்பாவாய்

   Verse
   
   Meaning
   

30   திருப்பாவை-30

வங்கக் கடல்கடைந்த மாதவனை கேசவனை

திங்கள் திருமுகத்து சேய்இழையார் சென்றுஇறைஞ்சி

அங்கப் பறைகொண்ட ஆற்றை அணிபுதுவைப்

பைங்கமலத் தண்தெரியல் பட்டர்பிரான்

கோதைசொன்ன சங்கத் தமிழ்மாலை முப்பதும் தப்பாமே

இங்கு இப்பரிசுரைப்பார் ஈரிரண்டு மால்வரைதோள்

செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால்

எங்கும் திருவருள்பெற்று இன்புறுவர் எம்பாவாய்

   Verse
   
   Meaning
   

   ஆண்டாள் – வாழி திருநாமம்
   

Please leave your valuable suggestions and feedback here