Kaniyidai Yeriya Sulaiyum


 

கனியிடை ஏறிய சுளையும் – முற்றல்

கழையிடை ஏறிய சாறும்,

பனிமலர் ஏறிய தேனும், – காய்ச்சுப்

பாகிடை ஏறிய சுவையும்;

நனிபசு பொழியும் பாலும் – தென்னை

நல்கிய குளிரிள நீரும்,

இனியன என்பேன் எனினும், – தமிழை

என்னுயிர் என்பேன் கண்டீர்!

 

கனியிடை ஏறிய சுளையும் – முற்றல்

கழையிடை ஏறிய சாறும்,

பனிமலர் ஏறிய தேனும், – காய்ச்சுப்

பாகிடை ஏறிய சுவையும்

 

பொழிலிடை வண்டின் ஒலியும் – ஓடைப்

புனலிடை வாய்க்கும் கலியும்,

குழலிடை வாய்க்கும் இசையும், – வீணை

கொட்டிடும் அமுதப் பண்ணும்,

குழவிகள் மழலைப் பேச்சும் – பெண்கள்

கொஞ்சிடும் இதழின் வாய்ப்பும்,

விழைகுவ னேனும், தமிழும் – நானும்

மெய்யாய் உடலுயிர் கண்டீர்!

 

கனியிடை ஏறிய சுளையும் – முற்றல்

கழையிடை ஏறிய சாறும்,

பனிமலர் ஏறிய தேனும், – காய்ச்சுப்

பாகிடை ஏறிய சுவையும்

 

பயிலுறும் அண்ணன் தம்பி, – அக்கம்

பக்கத் துறவின் முறையார்,

தயைமிக உடையாள் அன்னை – என்னைச்

சந்ததம் மறவாத் தந்தை,

குயில்போற் பேசிடும் மனையாள், – அன்பைக்

கொட்டி வளர்க்கும் பிள்ளை,

அயலவ ராகும் வண்ணம் – தமிழ் என்

அறிவினில் உறைதல் கண்டீர் !

 

கனியிடை ஏறிய சுளையும் – முற்றல்

கழையிடை ஏறிய சாறும்,

பனிமலர் ஏறிய தேனும், – காய்ச்சுப்

பாகிடை ஏறிய சுவையும்

 

நீலச் சுடர்மணி வானம் – ஆங்கே

நிறையக் குளிர்வெண் ணிலவாம்.

காலைப் பரிதியின் உதயம் – ஆங்கே

கடல்மேல் எல்லாம் ஒளியாம்,

மாலைச் சுடரினில் மூழ்கும் – நல்ல

மலைகளின் இன்பக் காட்சி

மேலென எழுதும் கவிஞர் – தமிழின்

விந்தையை எழுதத் தரமோ?

 

கனியிடை ஏறிய சுளையும் – முற்றல்

கழையிடை ஏறிய சாறும்,

பனிமலர் ஏறிய தேனும், – காய்ச்சுப்

பாகிடை ஏறிய சுவையும்

 

செந்நெல் மாற்றிய சோறும் – பசுநெய்

தேக்கிய கறியின் வகையும்,

தன்னிகர் தானியம் முதிரை, – கட்டித்

தயிரோடு மிளகின் சாறும்,

நன்மதுரஞ்செய் கிழங்கு – கானில்

நாவிலினித்திடும் அப்பம்,

உன்னை வளர்ப்பன தமிழா! -உயிரை

உணர்வை வளர்ப்பது தமிழே !

 

கனியிடை ஏறிய சுளையும் – முற்றல்

கழையிடை ஏறிய சாறும்,

பனிமலர் ஏறிய தேனும், – காய்ச்சுப்

பாகிடை ஏறிய சுவையும்;

நனிபசு பொழியும் பாலும் – தென்னை

நல்கிய குளிரிள நீரும்,

இனியன என்பேன் எனினும், – தமிழை

என்னுயிர் என்பேன் கண்டீர்!

 

கனியிடை ஏறிய சுளையும் – முற்றல்

கழையிடை ஏறிய சாறும்,

பனிமலர் ஏறிய தேனும், – காய்ச்சுப்

பாகிடை ஏறிய சுவையும்

 


    

Please leave your valuable suggestions and feedback here