வனவாரணப்பிள்ளையார் தோத்திரம்
பொற்பதிந்த நல்லூரினில்
கற்பக மழகளிற்றைப்
பொற்பதங்கள் போற்றிப்பணி
வாமே-பொலிவாமே – நலமாமே
மாடுவரும் தண்கழனி
காடுவரும் செல்வமெலாம்
தேடிவரும் சாதிசனம்
நாடிவரும் ஆதலினால்
(பொற்ப)
புத்திரப் பேறுவரும்
போகபெருஞ் சீரும்வரும்
சித்திர மாளிவரும்
தேகநலம் ஏறிவரும்
(பொற்ப)
நட்புவரும் பண்புவரும்
நல்லவர்கள் ஆசிவரும்
பெட்புவரும் பூமியினில்
பெருமையெலாம் சேரவரும்
(பொற்ப)
பதவிபல தேடிவரும்
பாரில்புகழ் கூடிவரும்
ரதகஜங்கள் யோகம்வரும்
ராஜமரியாதை வரும்
(பொற்ப)
ஆடல்வரும் பாடல்வரும்
அற்புதமாம் கவிதைவரும்
கூடல்வரும் எப்பொழுதும்
குதுகலமே பொங்கிவரும்
(பொற்ப)
தொழில்வளங்கள் சேர்த்திவரும்
தூரதேசக் கீர்த்திவரும்
அழிவிலாத சீர்த்திவரும்
ஆனந்த வார்த்தைவரும்
(பொற்ப)
ஆயுள்மிகக் கூடிவரும்
அன்பான வாழ்க்கைவரும்
நோய்கள்பிணி ஓடிவிடும்
நொந்துபகை வாடிவிடும்
(பொற்ப)
புத்திவரும் தூயசிவ
பத்திவரும் நாலிரண்டு
சித்திவரும் அன்பருக்கு
முத்திவரும் ஆதலினால்
(பொற்ப)
காவடியும் தேன்மலர்கள்
ஆவதில்லை என்றெனது
பாவடியும் செந்தவிழ்கள்
சேவடியில் சூடிமகிழ்
(பொற்ப)