Thiru Arimeya Vinnagaram ( Sri Kuda Maadu Koothan Perumal Temple )
Azhwar | Paasuram | Count |
---|---|---|
திருமங்கையாழ்வார் | பெரிய திருமொழி | 10 |
Total | 10 |
** திருமடந்தை மண்மடந்தை யிருபாலும் திகழத் தீவினைகள் போயகல அடியவர்கட் கென்றும்
அருள்நடந்து * இவ் வேழுலகத் தவர்ப்பணிய வானோர்அமர்ந்தேத்த இருந்தவிடம் * பெரும்புகழ்வே தியர்வாழ்
தருமிடங்கள் மலர்கள்மிகு கைதைகள்செங்கழுநீர் தாமரைகள் தடங்கடொறு மிடங்கடொறும் திகழ *
அருவிடங்கள் பொழில்தழுவி யெழில்திகழு நாங்கூர் அரிமேய விண்ணகரம் வணங்குமட நெஞ்சே
வென்றிமிகு நரகனுர மதுவழிய விசிறும் விறலாழித் தடக்கையன் விண்ணவர்கட்கு * அன்று
குன்றுகொடு குரைகடலைக் கடைந்தமுத மளிக்கும் குருமணியென் னாரமுதம் குலவியுறை கோயில் *
என்றுமிகு பெருஞ்செல்வத் தெழில்விளங்கு மறையோர் ஏழிசையும் கேள்விகளு மியன்றபெருங் குணத்தோர் *
அன்றுலகம் படைத்தவனே யனையவர்கள் நாங்கூர் அரிமேய விண்ணகரம் வணங்குமட நெஞ்சே
உம்பருமிவ் வேழுலகு மேழ்கடலு மெல்லாம் உண்டபிரான்ண்டர்கள்முன் கண்டுமகிழ வெய்த *
கும்பமிகு மதயானை மருப்பொசித்துக் கஞ்சன் குஞ்சிபிடித் தடித்தபிரான் கோயில் * மருங் கெங்கும்
பைம்பொனொடு வெண்முத்தம் பலபுன்னை காட்டப் பலங்கனிகள் தேன்காட்டப் படவரவே ரல்குல் *
அம்பனைய கண்மடவார் மகிழ்வெய்து நாங்கூர் அரிமேய விண்ணகரம் வணங்குமட நெஞ்சே
ஓடாத வாளரியி னுருவமது கொண்டு அன் றுலப்பில்மிகு பெருவரத்த விரணியனைப் பற்றி *
வாடாத வள்ளுகிரால் பிளந்தவன்றன் மகனுக் கருள்செய்தான் வாழுமிடம் மல்லிகைசெங் கழுநீர் *
சேடேறு மலர்ச்செருந்தி செழுங்கமுகம் பாளை செண்பகங்கள் மணநாறும் வண்பொழிலி னூடே *
ஆடேறு வயலாலைப் புகைகமழு நாங்கூர் அரிமேய விண்ணகரம் வணங்குமட நெஞ்சே
கண்டவர்தம் மனம்மகிழ மாவலிதன் வேள்விக் களவில்மிகு சிறுகுறளாய் மூவடியென் றிரந்திட்டு *
அண்டமுமிவ் வலைகடலு மவனிகளுமெல்லாம் அளந்தபிரா னமருமிடம் வளங்கொள்பொழி லயலே *
அண்டமுறு முழவொலியும் வண்டினங்க ளொலியும் அருமறையி னொலியும்மட வார்சிலம்பி னொலியும் *
அண்டமுறு மலைகடலி னொலிதிகழு நாங்கூர் அரிமேய விண்ணகரம் வணங்குமட நெஞ்சே
வாணெடுங்கண் மலர்க்கூந்தல் மைதிலிக்கா இலங்கை மன்னன்முடி யொருபதும்தோ ளிருபதும்போ யுதிர *
தாணெடுந்தின் சிலைவளைத்த தயரதன்சேய் என்தன் தனிச்சரண்வா னவர்க்கரசு கருதுமிடம் தடமார் *
சேணிடங்கொள் மலர்க்கமலம் சேல்கயல்கள் வாளை செந்நெலொடு மடுத்தரிய வுதிர்ந்தசெழு முத்தம் *
வாணெடுங்கண் கடைசியர்கள் வாருமணி நாங்கூர் அரிமேய விண்ணகரம் வணங்குமட நெஞ்சே
தீமனத்தான் கஞ்சனது வஞ்சனையில் திரியும் தேனுகனும் பூதனைத னாருயிரும் செகுத்தான் *
காமனைத்தான் பயந்தகரு மேனியுடை யம்மான் கருதுமிடம் பொருதுபுனல் துறைதுறைமுத் துந்தி *
நாமனத்தால் மந்திரங்கள் நால்வேதம் ஐந்து வேள்வியோ டாறங்கம் நவின்றுகலை பயின்று * அங்
காமனத்து மறையவர்கள் பயிலுமணி நாங்கூர் அரிமேய விண்ணகரம் வணங்குமட நெஞ்சே
கன்றதனால் விளவெறிந்து கனியுதிர்த்த காளை காமருசீர் முகில்வண்ணன் காலிகள்முன் காப்பான் *
குன்றதனால் மழைதடுத்துக் குடமாடு கூத்தன் குலவுமிடம் கொடிமதிள்கள் மாளிகைகோ புரங்கள் *
துன்றுமணி மண்டபங்கள் சாலைகள்தூ மறையோர் தொக்கீண்டித் தொழுதியொடு மிகப்பயிலும் சோலை *
அன்றலர்வாய் மதுவுண்டங் களிமுரலு நாங்கூர் அரிமேய விண்ணகரம் வணங்குமட நெஞ்சே
வஞ்சனையால் வந்தவள்த னுயிருண்டு வாய்த்த தயிருண்டு வெண்ணெயமு துண்டு * வலிமிக்க
கஞ்சனுயி ரதுவுண்டிவ் வுலகுண்ட காளை கருதுமிடம் காவிரிசந் தகில்கனக முந்தி *
மஞ்சுலவு பொழிலூடும் வயலூடும் வந்து வளங்கொடுப்ப மாமறையோர் மாமலர்கள் தூவி *
அஞ்சலித்தங் கரிசரணென் றிரைஞ்சுமணி நாங்கூர் அரிமேய விண்ணகரம் வணங்குமட நெஞ்சே
** சென்றுசின விடையேழும் படவடர்த்துப் பின்னை செவ்வித்தோள் புணர்ந்துகந்த திருமால்தன் கோயில் *
அன்றயனு மரன்சேயு மனையவர்கள் நாங்கூர் அரிமேய விண்ணகர மமர்ந்தசெழுங் குன்றை *
கன்றிநெடு வேல்வலவன் மங்கையர்தம் கோமான் கலிகன்றி யொலிமாலை யைந்தினொடு மூன்றும் *
ஒன்றினொடு மொன்றுமிவை கற்றுவல்லார் உலகத் துத்தமர்கட் குத்தமரா யும்பருமா வர்களே