035-ThiruVaiKundaVinnagaram


Thiru VaiKunda Vinnagaram ( Sri Vaigundha Nathan Perumal Temple )

Azhwar Paasuram Count
திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி 10
Total 10

1   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 3.9.1

** சலங்கொண்ட இரணியன தகல்மார்வம் கீண்டு தடங்கடலைக் கடைந்தமுதங் கொண்டுகந்த காளை *

நலங்கொண்ட கருமுகில்போல் திருமேனி யம்மான் நாடோறும் மகிழ்ந்தினிது மருவியுறை கோயில் *

சலங்கொண்டு மலர்சொரியும் மல்லிகையொண் செருந்தி சண்பகங்கள் மணநாறும் வண்பொழிலி னூடே *

வலங்கொண்டு கயலோடி விளையாடு நாங்கூர் வைகுந்த விண்ணகரம் வணங்குமட நெஞ்சே


2   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 3.9.2

திண்ணியதோ ரரியுருவாய்த் திசையனைத்தும் நடுங்கத் தேவரொடு தானவர்கள் திசைப்ப * இரணியனை

நண்ணியவன் மார்வகலத் துகிர்மடுத்த நாதன் நாடோறும் மகிழ்ந்தினிது மருவியுறை கோயில் *

எண்ணில்மிகு பெருஞ்செல்வத் தெழில்விளங்கு மறையும் ஏழிசையும் கேள்விகளு மியன்றபெருங் குணத்தோர் *

மண்ணில்மிகு மறையவர்கள் மலிவெய்து நாங்கூர் வைகுந்த விண்ணகரம் வணங்குமட நெஞ்சே


3   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 3.9.3

அண்டமுமிவ் வலைகடலு மவனிகளு மெல்லாம் அமுதுசெய்த திருவயிற்றன் அரன்கொண்டு திரியும் *

முண்டமது நிறைத்தவன்கண் சாபமது நீக்கும் முதல்வனவன் மகிழ்ந்தினிது மருவியுறை கோயில் *

எண்டிசையும் பெருஞ்செந்ந லிளந்தெங்கு கதலி இலைக்கொடியொண் குலைக்கமுகொ டிகலிவளம் சொரிய *

வண்டுபல விசைபாடமயிலாலு நாங்கூர் வைகுந்த விண்ணகரம் வணங்குமட நெஞ்சே


4   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 3.9.4

கலையிலங்கு மகலல்குல் அரக்கர்க்குலக் கொடியைக் காதொடுமூக் குடனரியக் கதறியவ ளோடி *

தலையிலங்கை வைத்துமலை யிலங்கைபுகச் செய்த தடந்தோளன் மகிழ்ந்தினிது மருவியுறை கோயில் *

சிலையிலங்கு மணிமாடத் துச்சிமிசைச் சூலம் செழுங்கொண்ட லகடிரியச் சொரிந்தசெழு முத்தம் *

மலையிலங்கு மாளிகைமேல் மலிவெய்து நாங்கூர் வைகுந்த விண்ணகரம் வணங்குமட நெஞ்சே


5   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 3.9.5

மின்னனைய _ண்மருங்குல் மெல்லியற்கா யிலங்கை வேந்தன்முடி யொருபதும்தோ ளிருபதும்போ யுதிர *

தன்நிகரில் சிலைவளைத்தன் றிலங்கைபொடி செய்த தடந்தோளன் மகிழ்ந்தினிது மருவியுறை கோயில் *

செந்நெலொடு செங்கமலம் சேல்கயல்கள் வாளை செங்கழுநீ ரொடுமிடைந்து கழனிதிகழ்ந் தெங்கும் *

மன்னுபுகழ் வேதியர்கள் மலிவெய்து நாங்கூர் வைகுந்த விண்ணகரம் வணங்குமட நெஞ்சே


6   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 3.9.6

பெண்மைமிகு வடிவுகொடு வந்தவளைப் பெரிய பேயினது உருவுகொடு மாளவுயி ருண்டு *

திண்மைமிகு மருதொடுநற் சகடமிறுத் தருளும் தேவனவன் மகிழ்ந்தினிது மருவியுறை கோயில் *

உண்மைமிகு மறையொடுநற் கலைகள்நிறை பொறைகள் உதவுகொடை யென்றிவற்றி னொழிவில்லா * பெரிய

வண்மைமிகு மறையவர்கள் மலிவெய்து நாங்கூர் வைகுந்த விண்ணகரம் வணங்குமட நெஞ்சே


7   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 3.9.7

விளங்கனியை யிளங்கன்று கொண்டுதிர வெறிந்து வேல்நெடுங்க ணாய்ச்சியர்கள் வைத்ததயிர் வெண்ணெய் *

உளங்குளிர அமுதுசெய்திவ் வுலகுண்ட காளை உகந்தினிது நாடோறும் மருவியுறை கோயில் *

இளம்படிநற் கமுகுகுலைத் தெங்குகொடிச் செந்நெல் ஈன்கரும்பு கண்வளரக் கால்தடவும் புனலால் *

வளங்கொண்ட பெருஞ்செல்வம் வளருமணி நாங்கூர் வைகுந்த விண்ணகரம் வணங்குமட நெஞ்சே


8   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 3.9.8

ஆறாத சினத்தின்மிகு நரகனுர மழித்த அடலாழித் தடக்கையன் அலர்மகட்கும் அரற்கும் *

கூறாகக் கொடுத்தருளும் திருவுடம்பன் இமையோர் குலமுதல்வன் மகிழ்ந்தினிது மருவியுறை கோயில் *

மாறாத மலர்க்கமலம் செங்கழுநீர் ததும்பி மதுவெள்ள மொழுகவய லுழவர்மடை யடைப்ப *

மாறாத பெருஞ்செல்வம் வளருமணி நாங்கூர் வைகுந்த விண்ணகரம் வணங்குமட நெஞ்சே


9   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 3.9.9

வங்கமலி தடங்கடலுள் வானவர்க ளோடு மாமுனிவர் பலர்கூடி மாமலர்கள் தூவி *

எங்கள்தனி நாயகனே எமக்கருளாய் என்னும் ஈசனவன் மகிழ்ந்தினிது மருவியுறை கோயில் *

செங்கயலும் வாளைகளும் செந்நெலிடைக் குதிப்பச் சேலுகளும் செழும்பணைசூழ் வீதிதொறும் மிடைந்து *

மங்குல்மதி யகடுரிஞ்சு மணிமாட நாங்கூர் வைகுந்த விண்ணகரம் வணங்குமட நெஞ்சே


10   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 3.9.10

** சங்குமலி தண்டுமுதல் சக்கரமுனேந்தும் தாமரைக்கண் நெடியபிரான் தானமரும் கோயில் *

வங்கமலி கடலுலகில் மலிவெய்து நாங்கூர் வைகுந்த விண்ணகர்மேல் வண்டறையும் பொழில்சூழ் *

மங்கையர்தம் தலைவன்மரு வலர்தமுடல் துணிய வாள்வீசும் பரகாலன் கலிகன்றி சொன்ன *

சங்கமலி தமிழ்மாலை பத்திவைவல்லார்கள் தரணியொடு விசும்பாளும் தன்மைபெறு வாரே