Thiru Manikkoodam ( Sri Varadharaja Perumal Temple )
Azhwar | Paasuram | Count |
---|---|---|
திருமங்கையாழ்வார் | பெரிய திருமொழி | 10 |
Total | 10 |
** தூம்புடைப் பனைக்கை வேழம் துயர்கெடுத் தருளி * மன்னு
காம்புடைக் குன்ற மேந்திக் கடுமழை காத்த எந்தை *
பூம்புனல் பொன்னி முற்றும் புகுந்துபொன் வரண்ட * எங்கும்
தேம்பொழில் கமழும் நாங்கூர்த் திருமணிக் கூடத் தானே
கவ்வைவா ளெயிற்று வன்பேய்க் கதிர்முலை சுவைத்து * இலங்கை
வவ்விய இடும்பை தீரக் கடுங்கணை துரந்த எந்தை *
கொவ்வைவாய் மகளிர் கொங்கைக் குங்குமம் கழுவிப் போந்த *
தெய்வநீர் கமழும் நாங்கூர்த் திருமணிக் கூடத் தானே
மாத்தொழில் மடங்கக் செற்று மறுதிற நடந்து * வன்தாள்
சேத்தொழில் சிதைத்துப் பின்னை செவ்வித்தோள் புணர்ந்த எந்தை *
நாத்தொழில் மறைவல் லார்கள் நயந்தறம் பயந்த * வண்கைத்
தீத்தொழில் பயிலும் நாங்கூர்த் திருமணிக் கூடத் தானே
தாங்கருஞ் சினத்து வன்தாள் தடக்கைமா மருப்பு வாங்கி *
பூங்குருந் தொசித்துப் புள்வாய் பிளந்தெரு தடர்த்த எந்தை *
மாங்கனி நுகர்ந்த மந்தி வந்துவண் டிரிய * வாழைத்
தீங்கனி நுகரும் நாங்கூர்த் திருமணிக் கூடத் தானே
கருமக ளிலங்கை யாட்டி பிலங்கொள்வாய் திறந்து * தன்மேல்
வருமவள் செவியும் மூக்கும் வாளினால் தடிந்த எந்தை *
பெருமகள் பேதை மங்கை தன்னொடும் பிரிவி லாத *
திருமகள் மருவும் நாங்கூர்த் திருமணிக் கூடத் தானே
கெண்டையும் குறளும் புள்ளும் கேழலு மரியும் மாவும் *
அண்டமும் சுடரும் அல்ல ஆற்றலு மாய எந்தை *
ஓண்டிறல் தென்ன னோட வடவர சோட்டங் கண்ட *
திண்டிற லாளர் நாங்கூர்த் திருமணிக் கூடத் தனே
குன்றமும் வானும் மண்ணும் குளிர்புனல் திங்க ளோடு *
நின்றவெஞ் சுடரும் அல்லா நிலைகளு மாய எந்தை *
மன்றமும் வயலும் காவும் மாடமும் மணங்கொண்டு * எங்கும்
தென்றல்வந் துலவும் நாங்கூர்த் திருமணிக் கூடத் தானே
சங்கையும் துணிவும் பொய்யும் மெய்யும் இத் தரணி யோம்பும் *
பொங்கிய முகிலும் அல்லாப் பொருள்களு மாய வெந்தை *
பங்கய முகுத்த தேறல் பருகிய வாளை பாய *
செங்கய லுகளும் நாங்கூர்த் திருமணிக் கூடத் தானே
பாவமும் அறமும் வீடும் இன்பமுந் துன்பந் தானும் *
கோவமும் அருளும் அல்லாக் குணங்களு மாய எந்தை *
மூவரி லெங்கள் மூர்த்தி இவன் என முனிவரோடு *
தேவர்வந் திறைஞ்சும் நாங்கூர்த் திருமணிக் கூடத் தனே
** திங்கள்தோய் மாட நாங்கூர்த் திருமணிக் கூடத் தானை *
மங்கையர் தலைவன் வண்தார்க் கலியன்வா யொலிகள் வல்லார் *
பொங்குநீ ருலக மாண்டு பொன்னுல காண்டு * பின்னும்
வெங்கதிர்ப் பரிதி வட்டத் தூடுபோய் விளங்கு வாரே