042-Thirukkoviloor


Thirukkoviloor ( Sri Thiruvikrama Perumal Temple )

Azhwar Paasuram Count
திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி 13
திருமங்கையாழ்வார் திருநெடுந்தாண்டகம் 3
திருமங்கையாழ்வார் சிறிய திருமடல் 1
திருமங்கையாழ்வார் பெரிய திருமடல் 1
பொய்கையாழ்வார் முதல் திருவந்தாதி 2
பூதத்தாழ்வார் இரண்டாம் திருவந்தாதி 1
Total 21

1   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 2.4.1

** அன்றாயர்கு லக்கொடி யோடணிமா மலர்மங்கையொ டன்பளவி * அவுணர்க்

கென்றானு மிரக்கமி லாதவனுக்குக் குறையுமிட மாவது * இரும்பொழில்சூழ்

நன்றாயபு னல்நறை யூர்த்திருவா லிகுடந்தை தடந்திகழ் கோவல்நகர் *

நின்றானிருந் தான்கிடந் தான்நடந்தாற் கிடம்மாமலை யாவது நீர்மலையே


2   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 2.10.1

** மஞ்சாடு வரையேழும் கடல்க ளேழும் வானகமும் மண்ணகமும் மற்று மெல்லாம் *

எஞ்சாமல் வயிற்றடக்கி யாலின் மேலோர் இளந்தளிரில் கண்வளர்ந்த ஈசன் றன்னை *

துஞ்சாநீர் வளஞ்சுரக்கும் பெண்ணைத் தென்பால் தூயநான் மறையாளர் சோமுச் செய்ய *

செஞ்சாலி விளைவயலுள் திகழ்ந்து தோன்றும் திருக்கோவ லூரதனுள் கண்டேன் நானே


3   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 2.10.2

கொந்தலர்ந்த நறுந்துழாய் சாந்தம் தூபம் தீபம்கொண் டமரர்த்தொழப் பணங்கொள்பாம்பில் *

சந்தணிமென் முலைமலராள் தரணி மங்கை தாமிருவ ரடிவருடும் தன்மை யானை *

வந்தனைசெய்து இசையேழா றங்கம் ஐந்து வளர்வேள்வி நான்மறைகள் மூன்று தீயும் *

சிந்தனைசெய் திருபொழுது மொன்றும் செல்வத் திருக்கோவ லூரதனுள் கண்டேன்நானே


4   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 2.10.3

கொழுந்தலரு மலர்ச்சோலைக் குழாங்கொள் பொய்கைக் கோள்முதலை வாளெயிற்றுக் கொண்டற்கெள்கி *

அழுந்தியமா களிற்றினுக்கன் றாழி யேந்தி அந்தரமே வரத்தோன்றி யருள்செய் தானை *

எழுந்தமலர்க் கருநீல மிருந்தில் காட்ட இரும்புன்னை முத்தரும்பிச் செம்பொன்காட்ட *

செழுந்தடநீர்க் கமலம்தீ விகைபோல் காட்டும் திருக்கோவ லூரதனுள் கண்டேன் நானே


5   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 2.10.4

தாங்கரும்போர் மாலிபடப் பறவை யூர்ந்து தராதலத்தோர் குறைமுடித்த தன்மையானை *

ஆங்கரும்பிக் கண்ணீர்சோர்ந் தன்பு கூரும் அடியவர்கட் காரமுத மானான் றன்னை *

கோங்கரும்பு சுரபுன்னை குரவார் சோலைக் குழாவரிவண் டிசைபாடும் பாடல் கேட்டு *

தீங்கரும்பு கண்வளரும் கழனி சூழ்ந்த திருக்கோவ லூரதனுள் கண்டேன் நானே


6   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 2.10.5

கறைவளர்வேல் கரன்முதலாக் கவந்தன் வாலி கணையொன்றி நால்மடிய இலங்கைதன்னுள் *

பிறையெயிற்று வாளரக்கர் சேனை யெல்லாம் பெருந்தகையோ டுடந்துணித்த பெம்மான்றன்னை *

மறைவளரப் புகழ்வளர மாடந் தோறும் மண்டபமொண் தொளியனைத்தும் வாரமோத *

சிறையணைந்த பொழிலணைந்த தென்றல் வீசும் திருக்கோவ லூரதனுள் கண்டேன் நானே


7   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 2.10.6

உறியார்ந்த நறுவெண்ணெ யொளியால் சென்றங் குண்டானைக் கண்டாய்ச்சி யுரலோ டார்க்க *

தறியார்ந்த கருங்களிறே போல நின்று தடங்கண்கள் பனிமல்கும் தன்மை யானை *

வெறியார்ந்த மலர்மகள்நா மங்கை யோடு வியன்கலையெண் தோளினாள் விளங்கு * செல்வச்

செறியார்ந்த மணிமாடம் திகழ்ந்து தோன்றும் திருக்கோவ லூரதனுள் கண்டேன் நானே


8   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 2.10.7

இருங்கைம்மா கரிமுனிந்து பரியைக் கீறி இனவிடைக ளேழடர்த்து மருதம் சாய்த்து *

வரும்சகட மிறவுதைத்து மல்லை யட்டு வஞ்சகஞ்செய் கஞ்சனுக்கு நஞ்சா னானை *

கருங்கமுகு பசும்பாளை வெண்முத் தீன்று காயெல்லாம் மரகதமாய்ப் பவளங் காட்ட *

செருந்திமிக மொட்டலர்த்தும் தேன்கொள் சோலைத் திருக்கோவ லூரதனுள் கண்டேன் நானே


9   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 2.10.8

** பாரேறு பெரும்பாரந் தீரப் பண்டு பாரதத்துத் தூதியங்கி * பார்த்தன் செல்வத்

தேரேறு சாரதியா யெதிர்ந்தார் சேனை செருக்களத்துத் திறலழியச் செற்றான்றன்னை *

போரேறொன் றுடையானு மளகைக் கோனும் புரந்தரனும் நான்முகனும் பொருந்து மூர்ப்போல் *

சீரேறு மறையாளர் நிறைந்த செல்வத் திருக்கோவ லூரதனுள் கண்டேன் நானே


10   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 2.10.9

தூவடிவின் பார்மகள்பூ மங்கை யோடு சுடராழி சங்கிருபால் பொலிந்து தோன்ற *

காவடிவின் கற்பகமே போல நின்று கலந்தவர்கட் கருள்புரியுங் கருத்தி னானை *

சேவடிகை திருவாய்கண் சிவந்த வாடை செம்பொன்செய் திருவுருவ மானான் றன்னை *

தீவடிவின் சிவனயனே போல்வார் மன்னு திருக்கோவ லூரதனுள் கண்டேன் நானே


11   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 2.10.10

** வாரணங்கொ ளிடர்க்கடிந்த மாலை நீல மரதகத்தை மழைமுகிலே போல்வான்றன்னை *

சீரணங்கு மறையாளர் நிறைந்த செல்வத் திருக்கோவ லூரதனுள் கண்டேன் என்று *

வாரணங்கு முலைமடவார் மங்கை வேந்தன் வாட்கலிய னொலியைந்து மைந்தும் வல்லார் *

காரணங்க லாலுகங் கலந்தங்க் கேத்தக் கரந்தெங்கும் பரந்தானைக் காண்பர் தாமே


12   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 7.3.2

தாய்நி னைந்தகன் றேயொக்க வென்னையும் தன்னை யேநினைக் கச்செய்து * தானெனக்

காய்நி னைந்தருள் செய்யு மப்பனை அன்றிவ் வையக முண்டுமிழ்ந் திட்ட

வாய னை * மக ரக்குழைக் காதனை மைந்த னைமதிள் கோவ லிடைகழி

யாயனை * அம ரர்க்கரி யேற்றையென் அன்ப னையன்றி யாதரி யேனே


13   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 7.10.4

பேய்மு லைத்தலை நஞ்சுண்ட பிள்ளையத் தெள்ளி யார்வணங் கப்படுந் தேவனை *

மாய னைமதிள் கோவலி டைகழி மைந்த னையன்றி யந்தணர் சிந்தையுள் ஈசனை *

இலங் கும்சுடர்ச் சோதியை எந்தை யையெனக் கெய்ப்பினில் வைப்பினை *

காசி னைமணி யைச்சென்று நாடிக்  கண்ண மங்கையுள் கண்டுகொண் டேனே


14   திருமங்கையாழ்வார் – திருநெடுந்தாண்டகம் – 6

அலம்புரிந்த நெடுந்தடக்கை அமரர் வேந்தன் அஞ்சிறைப்புள் தனிப்பாகன் அவுணர்க் கென்றும் *

சலம்புரிந்தங் கருளில்லாத் தன்மை யாளன் தானுகந்த வூரெல்லாம் தந்தாள் பாடி *

நிலம்பரந்து வரும்கலுழிப் பெண்ணை யீர்த்த நெடுவேய்கள் படுமுத்த முந்த வுந்தி *

புலம்பரந்த பொன்விளைக்கும் பொய்கை வேலிப் பூங்கோவ லூர்த்தொழுதும் போது நெஞ்சே


15   திருமங்கையாழ்வார் – திருநெடுந்தாண்டகம் – 7

வற்புடைய வரைநெடுந்தோள் மன்னர் மாள வடிவாய மழுவேந்தி யுலக மாண்டு *

வெற்புடைய நெடுங்கடலுள் தனிவே லுய்த்த வேள்முதலா வென்றானூர் விந்தம் மேய *

கற்புடைய மடக்கன்னி காவல் பூண்ட கடிபொழில்சூழ் நெடுமறுகில் கமல வேலி *

பொற்புடைய மலையரையன் பணிய நின்ற பூங்கோவ லூர்த்தொழுதும் போது நெஞ்சே


16   திருமங்கையாழ்வார் – திருநெடுந்தாண்டகம் – 17

பொங்கார்மெல் லிளங்கொங்கை பொன்னே பூப்பப் பொருகயல்கண் ணீரரும்பப் போந்து நின்று *

செங்கால மடப்புறவம் பெடைக்குப் பேசும் சிறுகுரலுக் குடலுருகிச் சிந்தித்து * ஆங்கே

தண்காலும் தண்குடந்தை நகரும் பாடித் தண்கோவ லூர்ப்பாடி யாடக் கேட்டு *

நங்காய் நங் குடிக்கிதுவோ நன்மை? என்ன நறையூரும் பாடுவாள் நவில்கின் றாளே


17   திருமங்கையாழ்வார் – சிறிய திருமடல் – 69

நானவனை காரார் திருமேனி காணுமளவும்போய் *

** சீரார் திருவேங் கடமே திருக்கோவல் ஊரே


18   திருமங்கையாழ்வார் – பெரிய திருமடல் – 122

முன்னிவ் வுலகுண்ட மூர்த்தியுயை * கோவலூர் 

மன்னும் இடைகழியெம் மாயவனை


19   பொய்கையாழ்வார் – முதல் திருவந்தாதி – 77

வேங்கடமும் விண்ணகரும் வெஃகாவும் * அஃகாத

பூங்கிடங்கில் நீள்கோவல் பொன்னகரும் * நான்கிடத்தும்

நின்றா னிருந்தான் கிடந்தான் நடந்தானே *

என்றால் கெடுமாம் இடர்


20   பொய்கையாழ்வார் – முதல் திருவந்தாதி – 86

நீயும் திருமகளும் நின்றாயால் * குன்றெடுத்துப்

பாயும் பனிமறைத்த பண்பாளா * வாயில்

கடைகழியா வுள்புகாக் காமர்பூங் கோவல் *

இடைகழியே பற்றி யினி


21   பூதத்தாழ்வார் – இரண்டாம் திருவந்தாதி – 70

தமருள்ளம் தஞ்சை தலையரங்கம் தண்கால் *

தமருள்ளும் தண்பொருப்பு வேலை * தமருள்ளும்

மாமல்லை கோவல் மதிட்குடந்தை யென்பரே *

ஏவல்ல எந்தைக் கிடம்