074-ThiruttholaiVillimangalam


Thiruttholai Villimangalam ( Sri Aravindha Lochana Perumal Temple )

Azhwar Paasuram Count
நம்மாழ்வார் திருவாய்மொழி 11
Total 11

1   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 6.5.1

** துவளில் மாமணி மாட மோங்கு தொலைவில் லிமங்க லம்தொழும்

இவளை * நீரினி யன்னை மீர்! உமக் காசை யில்லை விடுமினோ *

தவள வொண்சங்கு சக்க ரமென்றும் தாம ரைத்தடங் கணென்றும் *

குவளை யொண்மலர்க் கண்கள் நீர்மல்க நின்று நின்று குமுறுமே


2   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 6.5.2

குமிறு மோசை விழவொ லித்தொலை வில்லி மங்கலம் கொண்டுபுக்கு *

அமுத மென்மொழி யாளை நீருமக் காசை யின்றி அகற்றினீர் *

திமிர்க்கொண் டாலொத்து நிற்கும் மற்றிவள் தேவ தேவபி ரானென்றே *

நிமியும் வாயொடு கண்கள் நீர்மல்க நெக்கொ சிந்து கரையுமே


3   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 6.5.3

கரைகொள் பைம்பொழில் தண்ப ணைத்தொலை வில்லி மங்கலம் கொண்டுபுக்கு *

உரைகொ ளின்மொழி யாளை நீருமக் காசை யின்றி அகற்றினீர் *

திரைகொள் பெளவத்து சேர்ந்த தும்திசை ஞாலம் தாவி யளந்ததும் *

நிரைகள் மேய்த்தது மேபி தற்றி நெடுங்கண் ணீர்மல்க நிற்குமே


4   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 6.5.4

நிற்கும் நான்மறை வாணர் வாழ்தொலை வில்லி மங்கலங் கண்டபின் *

அற்க மொன்றும் அறிவு றாள்மலிந் தாள்கண் டீரிவள் அன்னைமீர் *

கற்கும் கல்வியெல் லாம்க ருங்கடல் வண்ணன் கண்ணபி ரானென்றே *

ஒற்க மொன்றுமி லள்உகந்துகந்து உள்மகிழ்ந்து குழையுமே


5   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 6.5.5

குழையும் வாள்முகத் தேழை யைத்தொலை வில்லி மங்கலம் கொண்டுபுக்கு *

இழைகொள் சோதிச்செந் தாம ரைக்கட் பிரானி ருந்தமை காட்டினீர் *

மழைபெய் தாலொக்கும் கண்ண நீரினொடு அன்று தொட்டும்மை யாந்து * இவள்

நுழையும் சிந்தையள் அன்னை மீர்தொழும் அத்தி சையுற்று நோக்கியே


6   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 6.5.6

நோக்கும் பக்கமெல் லாம்க ரும்பொடு செந்நெ லோங்குசெந் தாமரை *

வாய்க்கும் தண்பொரு நல்வ டகரை வந்தொ லைவில்லி மங்கலம் *

நோக்கு மேல்அத் திசையல் லால்மறு நோக்கி லள்வைகல் நாள்டொறும் *

வாய்க்கொள் வாசக மும்ம ணிவண்ணன் நாம மேயிவள் அன்னைமீர்


7   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 6.5.7

அன்னைமீர்!அணிமாமயில் சிறுமானி வள்நம்மைக் கைவலிந்து *

என்ன வார்த்தையும் கேட்குறாள் தொலைவில்லி மங்கலம் என்றல்லால் *

முன்னம் நோற்ற விதிகொ லோமுகில் வண்ணன் மாயங்கொ லோ * அவன்

சின்னமும்திருநாம முமிவள் வாயனகள் திருந்தவே


8   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 6.5.8

திருந்து வேதமும் வேள்வி யும்திரு மாம களிரும் தாம் * மலிந்

திருந்து வாழ்பொரு நல்வ டகரை வண்தொ லைவில்லி மங்கலம் *

கருந்த டங்கண்ணி கைதொ ழுதஅந்நாள்தொ டங்கியிந் நாள்தொறும் *

இருந்தி ருந்துதரவிந்த லோசன! என்றேன் றேநைந்தி ரங்குமே


9   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 6.5.9

இரங்கிநாள்தொறும் வாய்வெ ரீஇ யிவள் கண்ணநீர்கள் அலமர *

மரங்க ளுமிரங் குவகை மணிவண்ணவோ என்று கூவுமால் *

துரங்கம் வாய்பிளந் தானு றைதொலை வில்லி மங்கல மென்று * தன்

கரங்கள் கூப்பித் தொழுமவ் வூர்த்திரு நாமங் கற்றதற் பின்னையே


10   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 6.5.10

பின்னைகொல் நிலமாமகள்கொல் திருமகள்கொல் பிறந்திட்டாள் *

என்ன மாயங்கொ லோ?இ வள்நெடு மாலென் றேநின்று கூவுமால் *

முன்னி வந்தவன் நின்றி ருந்துறை யும்தொ லைவில்லி மங்கலம்

சென்னி யால்வணங் கும் * அவ்வூர்த்திரு நாமம் கேட்பது சிந்தையே


11   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 6.5.11

** சிந்தை யாலும்சொல் லாலும் செய்கையினாலும் தேவ பிரானையே *

தந்தை தாயென் றடைந்த வண்குரு கூர வர்சட கோபன்சொல் *

முந்தை யாயிரத் துள்ளி வைதொலை வில்லி மங்கலத் தைச்சொன்ன *

செந்தமிழ்பத்தும் வல்லாரடிமை செய் வார்திரு மாலுக்கே