078-Thirumaalirunsolai


Thirumaalirunsolai ( Sri Kallazhagar Perumal Temple )

Azhwar Paasuram Count
பெரியாழ்வார் பெரியாழ்வார் திருமொழி 34
ஆண்டாள் நாச்சியார் திருமொழி 11
திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி 30
திருமங்கையாழ்வார் திருக்குறுந்தாண்டகம் 1
திருமங்கையாழ்வார் சிறிய திருமடல் 1
திருமங்கையாழ்வார் பெரிய திருமடல் 1
பூதத்தாழ்வார் இரண்டாம் திருவந்தாதி 3
பேயாழ்வார் மூன்றாம் திருவந்தாதி 1
நம்மாழ்வார் திருவாய்மொழி 46
Total 128

1   பெரியாழ்வார் – பெரியாழ்வார் திருமொழி – 1.5.8

** உன்னையும் ஒக்கலையில் கொண்டு தமில்மருவி உன்னொடு தங்கள்கருத்தாயின செய்துவரும் *

கன்னிய ரும்மகிழக் கண்டவர் கண்குளிரக் கற்றவர் தெற்றிவரப் பெற்ற எனக்குஅருளி *

மன்னு குறுங்குடியாய் வெள்ளறை யாய் மதிள்சூழ் சோலை மலைக்கரசே கண்ண புரத்தமுதே *

என்னவலம் களைவாய் ஆடுக செங்கீரை ஏழுலகும் முடையாய் ஆடுக ஆடுகவே


2   பெரியாழ்வார் – பெரியாழ்வார் திருமொழி – 3.4.5

சுற்றி நின்றுஆ யர்தழை களிடச் சுருள்பங்கி நேத்திரத் தால்அ ணிந்து *

பற்றி நின்றுஆ யர்கடைத் தலையே பாடவும் ஆடக்கண் டேன் * அன் றிப்பின்

மற்றொரு வர்க்குஎன்னைப் பேச லொட்டேன் மாலிருஞ் சோலைஎம் மாயற் கல்லால் *

கொற்றவ னுக்குஇவ ளாமென் றெண்ணிக் கொடுமின் கள்கொடீ ராகில்கோ ழம்பமே


3   பெரியாழ்வார் – பெரியாழ்வார் திருமொழி – 4.2.1

** அலம்பா வெருட்டாக் கொன்று திரியும் அரக்கரை *

குலம்பாழ் படுத்துக் குலவிளக் காய்நின்ற கோன்மலை *

சிலம்பார்க்க வந்து தெய்வ மகளிர்க ளாடும்சீர் *

சிலம்பாறு பாயும் தென்திரு மாலிருஞ் சோலையே


4   பெரியாழ்வார் – பெரியாழ்வார் திருமொழி – 4.2.2

வல்லாளன் தோளும் வாளரக்கன் முடியும் * தங்கை

பொல்லாத மூக்கும் போக்குவித் தான்பொருந் தும்மலை *

எல்லா விடத்திலும் எங்கும் பரந்துபல் லாண்டொலி *

செல்லா நிற்கும் சீர்த்தென் திருமாலிருஞ் சோலையே


5   பெரியாழ்வார் – பெரியாழ்வார் திருமொழி – 4.2.3

தக்கார்மிக் கார்களைச் சஞ்சலம் செய்யும் சலவரை *

தெக்கா நெறியே போக்குவிக்கும் செல்வன் பொன்மலை *

எக்கால மும்சென்று சேவித் திருக்கும் அடியரை *

அக்கா னெறியை மாற்றும் தண்மாலிருஞ் சோலையே


6   பெரியாழ்வார் – பெரியாழ்வார் திருமொழி – 4.2.4

ஆனாயர் கூடி அமைத்த விழவை * அமரர்தம்

கோனார்க் கொழியக் கோவர்த் தனத்துச்செய் தான்மலை *

வானாட்டில் நின்று மாமலர்க் கற்பகத் தொத்திழி *

தேனாறு பாயும் தென்திரு மாலிருஞ் சோலையே


7   பெரியாழ்வார் – பெரியாழ்வார் திருமொழி – 4.2.5

ஒருவாரணம் பணிகொண்டவன் பொய்கையில் * கஞ்சன்தன்

ஒருவாரணம் உயிருண்டவன் சென்றுறை யும்மலை *

கருவாரணம் தன்பிடிதுறந் தோட * கடல்வண்ணன்

திருவாணைகூறத் திரியும் தண்மாலிருஞ் சோலையே


8   பெரியாழ்வார் – பெரியாழ்வார் திருமொழி – 4.2.6

ஏவிற்றுச் செய்வான் ஏன்றெதிர்ந்து வந்த மல்லரை *

சாவத் தகர்த்த சாந்தணி தோள்சது ரன்மலை *

ஆவத் தனமென்று அமரர் களும்நன் முனிவரும் *

சேவித் திருக்கும் தென்திரு மாலிருஞ் சோலையே


9   பெரியாழ்வார் – பெரியாழ்வார் திருமொழி – 4.2.7

மன்னர் மறுக மைத்துனன் மார்க்குஒரு தேரின்மேல் *

முன்னங்கு நின்று மோழை யெழுவித்த வன்மலை *

கொன்னவில் கூர்வேற் கோன்நெடு மாறன்தென் கூடற்கோன் *

தென்னன் கொண்டாடும் தென்திரு மாலிருஞ் சோலையே


10   பெரியாழ்வார் – பெரியாழ்வார் திருமொழி – 4.2.8

குறுகாத மன்னரைக் கூடுகலக்கி * வெங் கானிடைச்

சிறுகால்நெறியே போக்குவிக் கும்செல்வன் பொன்மலை *

அறுகால் வரிவண்டுகள் ஆயிரநாமம் சொல்லி *

சிறுகாலைப்பாடும் தென்திரு மாலிருஞ் சோலையே


11   பெரியாழ்வார் – பெரியாழ்வார் திருமொழி – 4.2.9

சிந்தப் புடைத்துச் செங்குருதி கொண்டு * பூதங்கள்

அந்திப் பலிகொடுத்து ஆவத் தனம்செய் அப்பன்மலை *

இந்திர கோபங்கள் எம்பெரு மான்கனி வாயொப்பான் *

சிந்தும் புறவில் தென்திரு மாலிருஞ் சோலையே


12   பெரியாழ்வார் – பெரியாழ்வார் திருமொழி – 4.2.10

எட்டுத் திசையும் எண்ணிறந்த பெருந் தேவிமார் *

விட்டு விளங்க வீற்றிருந்த விமலன்மலை *

பட்டிப் பிடிகள் பகடுறிஞ்சிச் சென்று * மாலைவாய்த்

தெட்டித்திளைக்கும் தென்திரு மாலிருஞ் சோலையே


13   பெரியாழ்வார் – பெரியாழ்வார் திருமொழி – 4.2.11

** மருதப் பொழிலணி மாலிருஞ் சோலை மலைதன்னை *

கருதி யுறைகின்ற கார்க்கடல் வண்ணனம் மான்தன்னை *

விரதம்கொண் டேத்தும் வில்லிபுத் தூர்விட்டு சித்தன்சொல் *

கருதி யுரைப்பவர் கண்ணன் கழலிணை காண்பார்களே


14   பெரியாழ்வார் – பெரியாழ்வார் திருமொழி – 4.3.1

** உருப்பிணி நங்கைதன்னை மீட்பான்தொடர்ந் தோடிச்சென்ற *

உருப்பனை யோட்டிக்கொண்டிட்டு உறைத்திட்ட உறைப்பன்மலை *

பொருப்பிடைக் கொன்றைநின்று முறியாழியும் காசும்கொண்டு *

விருப்பொடு பொன்வழங்கும் வியன்மாலிருஞ் சோலையதே


15   பெரியாழ்வார் – பெரியாழ்வார் திருமொழி – 4.3.2

கஞ்சனும் காளியனும் களிறும்மரு தும்எருதும் *

வஞ்சனை யில்மடிய வளர்ந்தமணி வண்ணன்மலை *

நஞ்சுமிழ் நாகமெழுந்தணவி நளிர் மாமதியை * செஞ்சுடர்

நாவளைக்கும் திருமாலிருஞ் சோலையதே


16   பெரியாழ்வார் – பெரியாழ்வார் திருமொழி – 4.3.3

மன்னு நரகன்தன்னைச் சூழ்போகி வளைத்தெறிந்து *

கன்னி மகளிர்தம்மைக் கவர்ந்தகடல் வண்ணன்மலை *

புன்னை செருந்தியொடு புனவேங்கையும் கோங்கும்நின்று *

பொன்னரி மாலைகள்சூழ் பொழில்மாலிருஞ் சோலையதே


17   பெரியாழ்வார் – பெரியாழ்வார் திருமொழி – 4.3.4

மாவலி தன்னுடைய மகன்வாணன் மகளிருந்த *

காவலைக் கட்டழித்த தனிக்காளை கருதும்மலை *

கோவலர் கோவிந்தனைக் குறமாதர்கள் * பண்குறிஞ்சிப்

பாவொலி பாடிநடம் பயில்மாலிருஞ் சோலையதே


18   பெரியாழ்வார் – பெரியாழ்வார் திருமொழி – 4.3.5

** பலபல நாழம்சொல்லிப் பழித்தசிசு பாலன்தன்னை *

அலவலை மைதவிர்த்த அழகன்அலங் காரன்மலை *

குலமலை கோலமலை குளிர்மாமலை கொற்றமலை *

நிலமலை நீண்டமலை திருமாலிருஞ் சோலையதே


19   பெரியாழ்வார் – பெரியாழ்வார் திருமொழி – 4.3.6

பாண்டவர் தம்முடைய பாஞ்சாலி மறுக்கமெல்லாம் *

ஆண்டுஅங்கு நூற்றுவர்தம் பெண்டிர்மேல்வைத்தஅப்பன்மலை *

பாண்டகு வண்டினங்கள் பண்கள்பாடி மதுப்பருக *

தோண்ட லுடையமலை தொல்லைமாலிருஞ் சோலையதே


20   பெரியாழ்வார் – பெரியாழ்வார் திருமொழி – 4.3.7

கனங்குழை யாள்பொருட்டாக் கணைபாரித்து * அரக்கர்தங்கள்

இனம்கழு வேற்றுவித்த எழில்தோள்எம் பிராமன்மலை *

கனம்கொழி தெள்ளருவி வந்துசூழ்ந்துஅகல் ஞாலமெல்லாம் *

இனம்குழு வாடும்மலை எழில்மாலிருஞ் சோலையதே


21   பெரியாழ்வார் – பெரியாழ்வார் திருமொழி – 4.3.8

எரிசித றும்சரத்தால் இலங்கையினை * தன்னுடைய

வரிசிலை வாயில்பெய்து வாய்க்கோட்டம் தவிர்த்துகந்த *

அரைய னமரும்மலை அமரரொடு கோனும்சென்று *

திரிசுடர் சூழும்மலை திருமாலிருஞ் சோலையதே


22   பெரியாழ்வார் – பெரியாழ்வார் திருமொழி – 4.3.9

கோட்டுமண் கொண்டிடந்து குடங்கையில்மண் கொண்டளந்து *

மீட்டுமதுண் டுமிழ்ந்து விளையாடு விமலன்மலை *

ஈட்டிய பல்பொருள்கள் எம்பிரானுக்கு அடியுறையென்று *

ஓட்டரும் தண்சிலம்பாறுடை மாலிருஞ் சோலையதே


23   பெரியாழ்வார் – பெரியாழ்வார் திருமொழி – 4.3.10

** ஆயிரம் தோள்பரப்பி முடியாயிரம் மின்னிலக *

ஆயிரம் பைந்தலைய அனந்தசயனன் ஆளும்மலை *

ஆயிர மாறுகளும் சுனைகள்பல வாயிரமும் *

ஆயிரம்பூம் பொழிலுமுடை மாலிருஞ் சோலையதே


24   பெரியாழ்வார் – பெரியாழ்வார் திருமொழி – 4.3.11

** மாலிருஞ் சோலையென்னும் மலையையுடை யமலையை *

நாலிரு மூர்த்திதன்னை நால்வேதக் கடலமுதை *

மேலிருங் கற்பகத்தை வேதாந்த விழுப்பொருளில் *

மேலிருந்த விளக்கை விட்டுசித்தன் விரித்தனவே


25   பெரியாழ்வார் – பெரியாழ்வார் திருமொழி – 5.3.1

** துக்கச் சுழலையைச் சூழ்ந்துகிடந்த வலையை அறப்பறித்து *

புக்கினில் புக்குன்னைக் கண்டுகொண் டேன்இனிப் போகவிடுவதுண்டே *

மக்க ளறுவரைக் கல்லிடை மோத இழந்தவள் தன்வயிற்றில் *

சிக்கென வந்து பிறந்துநின் றாய்திரு மாலிருஞ்சோலை யெந்தாய்


26   பெரியாழ்வார் – பெரியாழ்வார் திருமொழி – 5.3.2

வளைத்துவைத் தேன்இனிப் போகலொட்டேன்  உந்த னிந்திர ஞாலங்களால் *

ஒளித்திடில் நின்திரு வாணைகண் டாய்நீ ஒருவர்க்கும் மெய்யனல்லை *

அளித்தெங்கும் நாடும் நகரமும் தம்முடைத் தீவினை தீர்க்கலுற்று *

தெளித்து வலஞ்செய்யும் தீர்த்தமுடைத் திரு மாலிருஞ் சோலையெந்தாய்


27   பெரியாழ்வார் – பெரியாழ்வார் திருமொழி – 5.3.3

** உனக்குப் பணிசெய் திருக்கும் தவமுடை யேன்இனிப் போய்ஒருவன்

தனக்குப் பணிந்து * கடைத்தலை நிற்கைநின் சாயை யழிவு கண்டாய் *

புனத்தினை கிள்ளிப் புதுவவி காட்டிஉன் பொன்னடி வாழ்கவென்று *

இனக்குற வர்புதிய துண்ணும் எழில்திரு மாலிருஞ் சோலையெந்தாய்


28   பெரியாழ்வார் – பெரியாழ்வார் திருமொழி – 5.3.4

காதம் பலவும் திரிந்துழன் றேற்குஅங்கோர் நிழலில்லை நீருமில்லை * உன்

பாத நிழலல்லால் மற்றோ ருயிர்ப்பிடம் நான்எங்கும் காண்கின்றிலேன் *

தூதுசென் றாய்குரு பாண்டவர்க் காய்அங்கோர் பொய்சுற்றம் பேசிச்சென்று *

பேதஞ்செய்து எங்கும் பிணம்படுத்தாய் திருமாலிருஞ் சோலையெந்தாய்


29   பெரியாழ்வார் – பெரியாழ்வார் திருமொழி – 5.3.5

காலுமெழா கண்ணநீரும் நில்லா உடல் சோர்ந்து நடுங்கி * குரல்

மேலு மெழாமயிர்க் கூச்சுமறாஎன தோள்களும் வீழ்வொழியா *

மாலுக ளாநிற்கும் என்மன னேஉன்னை வாழத் தலைப்பெய்திட்டேன் *

சேலுக ளாநிற்கும் நீள்சுனை சூழ்திரு மாலிருஞ் சோலையெந்தாய்


30   பெரியாழ்வார் – பெரியாழ்வார் திருமொழி – 5.3.6

எருத்துக் கொடியுடை யானும் பிரமனும் இந்திர னும் * மற்றும்

ஒருத்தரும் இப்பிற வியென்னும் நோய்க்கு மருந்தறி வாருமில்லை *

மருத்துவ னாய்நின்ற மாமணி வண்ணா மறுபிற விதவிரத்

திருத்தி * உங் கோயிற் கடைப்புகப் பெய்திரு மாலிருஞ் சோலையெந்தாய்


31   பெரியாழ்வார் – பெரியாழ்வார் திருமொழி – 5.3.7

அக்கரை யென்னு மனத்தக் கடலு ளழுந்திஉன் பேரருளால் *

இக்கரை யேறி யிளைத்திருந் தேனைஅஞ் சேலென்று கைகவியாய் *

சக்கர மும்தடக் கைகளும் கண்களும் பீதக வாடையொடும் *

செக்கர் நிறத்துச் சிவப்புடை யாய்திரு மாலிருஞ் சோலையெந்தாய்


32   பெரியாழ்வார் – பெரியாழ்வார் திருமொழி – 5.3.8

எத்தனை காலமும் எத்தனை யூழியும் இன்றொடு நாளையென்றே *

இத்தனை காலமும் போய்க்கிறிப் பட்டேன் இனிஉன்னைப் போகலொட்டேன் *

மைத்துனன் மார்களை வாழ்வித்து மாற்றலர் நூற்றுவ ரைக்கெடுத்தாய் *

சித்தம்நின் பால தறிதியன் றேதிரு மாலிருஞ் சோலையெந்தாய்


33   பெரியாழ்வார் – பெரியாழ்வார் திருமொழி – 5.3.9

அன்று வயிற்றில் கிடந்திருந்தே அடிமை செய்ய லுற்றிருப்பன் *

இன்று வந்து இங்கு உன்னைக் கண்டு கொண்டேன் இனிப் போக விடுவதுண்டே *

சென்றங்கு வாணனை ஆயிரந் தோளும் திருச்சக் கரமதனால் *

தென்றித் திசைதிசை வீழச்செற்றாய் திருமாலிருஞ் சோலையெந்தாய்


34   பெரியாழ்வார் – பெரியாழ்வார் திருமொழி – 5.3.10

** சென்றுல கம்குடைந் தாடும் சுனைத்திரு மாலிருஞ் சோலைதன்னுள்

நின்ற பிரான் * அடி மேல்அடி மைத்திறம் நேர்பட விண்ணப்பஞ்செய் *

பொன்திகழ் மாடம் பொலிந்துதோன்றும் புதுவைக்கோன் விட்டுசித்தன் *

ஒன்றினோ டொன்பதும் பாடவல்லார் உல கமளந் தான்தமரே


35   ஆண்டாள் – நாச்சியார் திருமொழி – 4.1

** தெள்ளி யார்பலர் கைதொழும் தேவனார் *

வள்ளல் மாலிருஞ் சோலை மணாளனார் *

பள்ளி கொள்ளு மிடத்தடி வொட்டிட *

கொள்ளு மாகில்நீ கூடிடு கூடலே


36   ஆண்டாள் – நாச்சியார் திருமொழி – 9.1

** சிந்துரச் செம்பொடிப்போல் திருமாலிருஞ் சோலையெங்கும் *

இந்திர கோபங்களே எழுந்தும்பரந் திட்டனவால் *

மந்தரம் நாட்டியன்று மதுரக்கொழுஞ் சாறுகொண்ட *

சுந்தரத் தோளுடையான் சுழலையினின் றுய்துங்கொலோ


37   ஆண்டாள் – நாச்சியார் திருமொழி – 9.2

போர்களி றுபொரும்மா லிருஞ்சோலையம் பூம்புறவில் *

தார்க்கொடி முல்லைகளும் தவளநகை காட்டுகின்ற *

கார்க்கொள் படாக்கள்நின்று கழறிச்சிரிக் கத்தரியேன் *

ஆர்க்கிடு கோதோழி அவன்தார்ச்செய்த பூசலையே


38   ஆண்டாள் – நாச்சியார் திருமொழி – 9.3

கருவிளை யொண்மலர்காள் காயாமலர் காள் * திருமால்

உருவொளி காட்டுகின்றீர் எனக்குய்வழக் கொன்றுரையீர் *

திருவிளை யாடுதிண்டோள் திருமாலிருஞ் சோலைநம்பி *

வரிவளை யில்புகுந்து வந்திபற்றும் வழக்குளதே


39   ஆண்டாள் – நாச்சியார் திருமொழி – 9.4

பைம்பொழில் வாழ்குயில்காள் மயில்காள்ஒண் கருவிளைகாள் *

வம்பக் களங்கனிகாள் வண்ணப்பூவை நறுமலர்காள் *

ஐம்பெரும் பாதகர்காள் அணிமாலிருஞ் சோலைநின்ற *

எம்பெரு மானுடைய நிறமுங்களுக் கெஞ்செய்வதே


40   ஆண்டாள் – நாச்சியார் திருமொழி – 9.5

துங்க மலர்ப்பொழில்சூழ் திருமாலிருஞ் சோலைநின்ற *

செங்கட் கருமுகிலின் திருவுருப் போல் * மலர்மேல்

தொங்கிய வண்டினங்காள் தொகுபூஞ்சுனை காள் * சுனையில்

தங்குசெந் தாமரைகாள் எனக்கோர்சரண் சாற்றுமினே


41   ஆண்டாள் – நாச்சியார் திருமொழி – 9.6

** நாறுநறும் பொழில்மா லிருஞ்சோலை நம்பிக்கு * நான்

நூறுதடாவில் வெண்ணெய் வாய்நேர்ந்து பராவிவைத்தேன் *

நூறுதடா நிறைந்த அக்கார வடிசில்சொன்னேன் *

ஏறுதிருவுடையான் இன்றுவந்திவை கொள்ளுங்கொலோ


42   ஆண்டாள் – நாச்சியார் திருமொழி – 9.7

இன்றுவந் தித்தனையும் அமுதுசெய் திடப்பெறில் * நான்

ஒன்றுநூ றாயிரமாக் கொடுத்துப்பின்னும் ஆளும்செய்வன் *

தென்றல் மணங்கமழும் திருமாலிருஞ் சோலைதன்னுள்

நின்ற பிரான் * அடியேன் மனத்தேவந்து நேர்படிலே


43   ஆண்டாள் – நாச்சியார் திருமொழி – 9.8

காலை யெழுந்திருந்து கரியகுரு விக்கணங்கள் *

மாலின் வரவுசொல்லி மருள்பாடுதல் மெய்ம்மைகொலோ *

சோலை மலைப்பெருமான் துவராபதி யெம்பெருமான் *

ஆலி னிலைப்பெருமான் அவன் வார்த்தை யுரைக்கின்றதே


44   ஆண்டாள் – நாச்சியார் திருமொழி – 9.9

கோங்கல ரும்பொழில்மா லிருஞ்சோலயில் கொன்றைகள்மேல் *

தூங்குபொன் மாலைகளோ டுடனாய்நின்று தூங்குகின்றேன் *

பூங்கொள் திருமுகத்து மடுத்தூதிய சங்கொலியும் * சார்ங்கவில்

நாணொலியும் தலைப்பெய்வதெஞ் ஞான்றுகொலோ


45   ஆண்டாள் – நாச்சியார் திருமொழி – 9.10

** சந்தொடு காரகிலும் சுமந்துதடங் கள்பொருது *

வந்திழி யும்சிலம்பா றுடைமாலிருஞ் சோலைநின்ற

சுந்தரனை * சுரும்பார் குழல்கோதை தொகுத்துரைத்த *

செந்தமிழ் பத்தும்வல்லார் திருமாலடி சேர்வர்களே


46   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 1.8.5

வண்கையானவுணர்க்குநாயகன் வேள்வியில்சென்றுமாணியாய் *

மண்கையாலிரந்தான் மராமரமேழுமெய்தவலத்தினான் *

எண்கையானிமயத்துள்ளான் இருஞ்சோலைமேவியவெம்பிரான் *

திண்கைம்மாதுயரதீர்த்தவன் திருவேங்கடமடைநெஞ்சமே


47   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 2.7.7

உளங்கனிந் திருக்கும் உன்னையே பிதற்றும் உனக்கன்றி யெனக்கன்பொன் றிலளால் *

வளங்கனி பொழில்சூழ் மாலிருஞ் சோலை மாயனே என்றுவாய் வெருவும் *

களங்கனி முறுவல் காரிகை பெரிது கவலையோ டவலம்சேர்ந் திருந்த *

இளங்கனி யிவளுக் கென்னினைந் திருந்தாய் இடவெந்தை யெந்தை பிரானே


48   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 4.9.2

** சிந்தை தன்னுள் நீங்கா திருந்த திருவே மருவினிய

மைந்தா * அந்த ணாலி மாலே சோலை மழகளிறே *

நந்தா விளக்கின் சுடரே நறையூர் நின்ற நம்பீ * என்

எந்தாய் இந்த ளூராய் அடியேற் கிறையு மிரங்காயே


49   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 7.3.6

எட்ட னைப்பொழு தாகிலு மென்றும் என்ம னத்தக லாதிருக் கும்புகழ் *

தட்ட லர்த்தபொன் னைஅலர் கோங்கின் தாழ்பொ ழில்திரு மாலிருஞ் சோலையங்

கட்டி யை * கரும் பீன்றவின் சாற்றைக் காத லால்மறை நான்குமுன் னோதிய

பட்ட னை * பர வைத்துயி லேற்றையென் பண்ப னையன்றிப் பாடல்செய் யேனே


50   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 7.9.7

** சேயோங்குதண் திருமாலிருஞ் சோலைமலை யுறையும் மாயா * எனக்

குரையாயிது மறைநான்கினு ளாயோ *

தீயோம்புகை மறையோர்ச்சிறு புலியூர்ச்சல சயனத்

தாயோ * உன தடியார்மனத் தாயோவறி யேனே


51   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 9.2.3

வேயிருஞ் சோலை விலங்கல் சூழ்ந்த மெய்ய மணாளர் இவ் வையமெல்லாம் *

தாயின நாயக ராவர் தோழீ தாமரைக் கண்கள் இருந்தவாறு *

சேயிருங் குன்றம் திகழ்ந்த தொப்பச் செவ்விய வாகி மலர்ந்தசோதி *

ஆயிரம் தோளொ டிலங்கு பூணும் அச்சோ ஒருவர் அழகியவா


52   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 9.2.8

மஞ்சுயர் மாமதி தீண்ட நீண்ட மாலிருஞ் சோலைம ணாளர்வந்து * என்

நெஞ்சுள்ளும் கண்ணுள்ளும் நின்று நீங்கார் நீர்மலை யார்கொல்? நினைக்கமாட்டேன் *

மஞ்சுயர் பொன்மலை மேலெ ழுந்த மாமுகில் போன்றுளர் வந்துகாணீர் *

அஞ்சிறைப் புள்ளுமொன் றேறி வந்தார் அச்சோவொரு வரழகியவா


53   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 9.8.1

** முந்துற வுரைக்கேன் விரைக்குழல் மடவார் கலவியை விடுதடு மாறல் *

அந்தர மேழும் அலைகட லேழும் ஆயவெம் மடிகள்தம் கோயில் *

சந்தொடு மணியும் அணிமயில் தழையும் தழுவிவந் தருவிகள் நிரந்து *

வந்திழி சாரல் மாலிருஞ் சோலை வணங்குதும் வாமட நெஞ்சே


54   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 9.8.2

இண்டையும் புனலும் கொண்டிடை யின்றி எழுமினோ தொழுதும் என்று * இமையோர்

அண்டரும் பரவ அரவணைத் துயின்ற சுடர்முடிக் கடவுள்தம் கோயில் *

விண்டலர் தூளி வேய்வளர் புறவில் விரைமலர்க் குறிஞ்சியின் நறுந்தேன் *

வண்டமர் சாரல் மாலிருஞ் சோலை வணங்குதும் வாமட நெஞ்சே


55   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 9.8.3

பிணிவளர் ஆக்கை நீங்க நின் றேத்தப் பெருநிலம் அருளின்முன் அருளி *

அணிவளர் குறளாய் அகலிடம் முழுதும் அளந்தவெம் மடிகள்தம் கோயில் *

கணிவளர் வேங்கை நெடுநில மதனில் குறவர்தம் கவணிடைத் துரந்த *

மணிவளர் சாரல் மாலிருஞ்சோலை வணங்குதும் வாமட நெஞ்சே


56   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 9.8.4

சூர்மயி லாய பேய்முலை சுவைத்துச் சுடுசரம் அடுசிலைத் துரந்து *

நீர்மையி லாத தாடகை மாள நினைந்தவர் மனம்கொண்ட கோயில் *

கார்மலி வேங்கை கோங்கலர் புறவில் கடிமலர் குறிஞ்சியின் நறுந்தேன் *

வார்புனல் சூழ்தண் மாலிருஞ் சோலை வணங்குதும் வாமட நெஞ்சே


57   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 9.8.5

வணங்கலில் அரக்கன் செருக்களத் தவிய மணிமுடி ஒருபதும் புரள *

அணங்கெழுந் தவன்றன் கவந்தம்நின் றாட அமர்ச்செய்த அடிகள்தம் கோயில் *

பிணங்கலில் நெடுவேய் நுதிமுகம் கிழிப்பப் பிரசம்வந் திழிதர * பெருந்தேன்

மணங்கமழ் சாரல் மாலிருஞ் சோலை வணங்குதும் வாமட நெஞ்சே


58   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 9.8.6

விடங்கலந் தமர்ந்த அரவணைத் துயின்று விளங்கனிக் கிளங்கன்று விசிறி *

குடங்கலந் தாடிக் குரவைமுன் கோத்த கூத்தவெம் மடிகள்தம் கோயில் *

தடங்கடல் முகந்து விசும்பிடைப் பிளிறத் தடவரைக் களிறென்று முனிந்து *

மடங்கல்நின் றதிரும் மாலிருஞ் சோலை வணங்குதும் வாமட நெஞ்சே


59   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 9.8.7

தேனுகன் ஆவி போயுக அங்கோர் செழுந்திரள் பனங்கனி யுதிர * தானுகந்

தெறிந்த தடங்கடல் வண்ணர் எண்ணிமுன் இடங்கொண்ட கோயில் *

வானகச் சோலை மரகதச் சாயல் மாமணிக் கல்லதர் நிறைந்து *

மானுகர் சாரல் மாலிருஞ் சோலை வணங்குதும் வாமட நெஞ்சே


60   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 9.8.8

புதமிகு விசும்பில் புணரிசென் றணவப் பொருகடல் அரவணைத் துயின்று *

பதமிகு பரியின் மிகுசினம் தவிர்த்த பனிமுகில் வண்ணர்தம் கோயில் *

கதமிகு சினத்த கடதடக் களிற்றின் கவுள்வழிக் களிவண்டு பருக *

மதமிகு சாரல் மாலி ருஞ் சோலை வணங்குதும் வாமட நெஞ்சே


61   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 9.8.9

புந்தியில் சமணர் புத்தரென் றிவர்கள் ஒத்தன பேசவும் உகந்திட்டு *

எந்தைபெம் மானார் இமையவர் தலைவர் எண்ணிமுன் இடங்கொண்ட கோயில் *

சந்தனப் பொழிலின் தாழ்சினை நீழல்  தாழ்வரை மகளிர்கள் நாளும் *

மந்திரத் திறைஞ்சும் மாலிருஞ் சோலை வணங்குதும் வாமட நெஞ்சே


62   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 9.8.10

** வண்டமர் சாரல் மாலிருஞ் சோலை மாமணி  வண்ணரை வணங்கும் *

தொண்டரைப் பரவும் சுடரொளி நெடுவேல் சூழ்வயல் ஆலிநன் னாடன் *

கண்டல்நல் வேலி மங்கையர் தலைவன் கலியன்வா யொலிசெய்த பனுவல் *

கொண்டிவை பாடும் தவமுடை யார்கள் ஆள்வரிக் குரைகட லுலகே


63   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 9.9.1

** மூவ ரில்முன்மு தல்வன் முழங் கார்கட லுள்கிடந்து *

பூவுல ருந்திதன் னுள் புவனம் படைத் துண்டுமிழ்ந்த *

தேவர் கள்நா யகனைத் திருமா லிருஞ்சோலை நின்ற *

கோவ லர்கோவிந் தனைக் கொடி யேரிடை கூடுங்கொலோ


64   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 9.9.2

புனைவளர் பூம்பொழி லார் பொன்னி சூழரங் கநகருள்

முனைவனை * மூவுல கும்படைத் த முதல் மூர்த்திதன்னை *

சினைவளர் பூம்பொழில் சூழ் திரு மாலிருஞ் சோலைநின்றான் *

கனைகழல் காணுங்கொ லோகயல் கண்ணியெம் காரிகையே


65   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 9.9.3

உண்டுல கேழினை யும் ஒரு பாலகன் ஆலிலைமேல் *

கண்டுயில் கொண்டுகந் தகரு மாணிக்க மாமலையை *

திண்டிறல் மாகரி சேர்திரு மாலிருஞ் சோலைநின்ற *

அண்டர்தம் கோவினை யின்றணு குங்கொலென் ஆயிழையே


66   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 9.9.4

சிங்கம தாயவு ணன்திற லாகம்முன் கீண்டுகந்த *

பங்கய மாமலர்க் கண்பர னையெம் பரஞ்சுடரை *

திங்கள்நன் மாமுகில் சேர்திரு மாலிருஞ் சோலைநின்ற *

நங்கள்பி ரானையின் றுநணு குங்கொலென் நன்னுதலே


67   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 9.9.5

தானவன் வேள்வி தன்னில் தனியே குறளாய் நிமிர்ந்து *

வானமும்மண் ணகமும் அளந்த திஜீவிக் கிரமன் *

தேனமர் பூம்பொழில் சூழ் திருமாலிருஞ் சோலைநின்ற *

வானவர் கோனையின் று வணங்கித்தொழ வல்லள் கொலோ


68   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 9.9.6

** நேசமி லாதவர்க் கும்நினை யாதவர்க் கும்மரியான் *

வாசம லர்ப்பொழில் சூழ்வட மாமது ரைப்பிறந்தான் *

தேசமெல் லாம்வணங் கும்திரு மாலிருஞ் சோலைநின்ற *

கேசவ நம்பிதன் னைக்கெண்டை யொண்கண்ணி காணுங்கொலோ


69   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 9.9.7

புள்ளினை வாய்பிளந் துபொரு மாகரி கொம்பொசித்து *

கள்ளச் சகடுதைத் தகரு மாணிக்க மாமலையை *

தெள்ளரு விகொழிக் கும்திரு மாலிருஞ் சோலைநின்ற *

வள்ளலை வாணுத லாள்வணங் கித்தொழ வல்லள்கொலோ


70   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 9.9.8

** பார்த்தனுக் கன்றரு ளிப்பார தத்தொரு தேர்முன்னின்று *

காத்தவன் றன்னைவிண் ணோர்கரு மாணிக்க மாமலையை *

தீர்த்தனைப் பூம்பொழில் சூழ்திரு மாலிருஞ் சோலைநின்ற *

மூர்த்தியைக் கைதொழ வும்முடி யுங்கொலென் மொய்குழற்கே


71   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 9.9.9

** வலம்புரி யாழி யனைவரை யார்திரள் தோளன்றன்னை *

புலம்புரி நூலவ னைப்பொழில் வேங்கட வேதியனை *

சிலம்பிய லாறுடை யதிரு மாலிருஞ் சோலைநின்ற *

நலந்திகழ் நாரண னைநணு குங்கொலென் நன்னுதலே


72   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 9.9.10

** தேடற் கரியவ னைத்திரு மாலிருஞ் சோலை நின்ற *

ஆடல் பறவை யனை அணி யாயிழை காணுமென்று *

மாடக் கொடிமதிள் சூழ்மங்கை யார்கலி கன்றிசொன்ன *

பாடல் பனுவல்பத் தும்பயில் வார்க்கில்லை பாவங்களே


73   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 10.1.8

** பத்த ராவியைப் பான்மதி யை * அணித்

தொத்தை மாலிருஞ் சோலைத் தொழுதுபோய் *

முத்தி னைமணி யைமணி மாணிக்க

வித்தி னை * சென்று விண்ணகர்க் காண்டுமே


74   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 11.2.8

மன்சுறு மாலிருஞ் சோலை நின்ற மணாளனார் *

நெஞ்சம் நிறைகொண்டு போயி னார்நினை கின்றிலர் *

வெஞ்சுடர் போய்விடி யாமல் எவ்விடம் புக்கதோ *

நஞ்சு உடலம் துயின்றால் நமக்கினி நல்லதே


75   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 11.7.9

** தேனோடு வண்டாலும் திருமா லிருஞ்சோலை *

தானிடமாக் கொண்டான் தடமலர்க் கண்ணிக்காய் *

ஆன்விடையே ழன்றடர்த்தாற் காளானா ரல்லாதார் *

மானிடவர் அல்லரென் றென்மனத்தே வைத்தேனே


76   திருமங்கையாழ்வார் – திருக்குறுந்தாண்டகம் – 3

பாயிரும் பரவை தன்னுள் பருவரை திரித்து * வானோர்க்

காயிருந் தமுதங்க் கொண்ட அப்பனை எம்பி ரானை *

வேயிருஞ்சோலை சூழ்ந்து விரிகதி ரிரிய நின்ற *

மாயிருஞ்சோலை மேய மைந்தனை வணங்கி னேனே


77   திருமங்கையாழ்வார் – சிறிய திருமடல் – 74

சீராரும் மாலிரும் சோலை திரு மோகூர் *

பாரோர் புகழும் வதரி வடமதுரை


78   திருமங்கையாழ்வார் – பெரிய திருமடல் – 125

மன்னனை மாலிருஞ் சோலை மணாளனை *

கொன்னவிலும் ஆழிப் படையானை


79   பூதத்தாழ்வார் – இரண்டாம் திருவந்தாதி – 46

பயின்ற தரங்கம் திருக்கோட்டி * பன்னாள்

பயின்றதுவும் வேங்கடமே * பன்னாள் பயின்ற

தணிதிகழும் சோலை யணிநீர் மலையே *

மணிதிகழும் வண்தடக்கை மால்


80   பூதத்தாழ்வார் – இரண்டாம் திருவந்தாதி – 48

உணர்ந்தாய் மறைநான்கும் ஓதினாய் நீதி *

மணந்தாய் மலர்மகள்தோள் மாலே * மணந்தாய்போய்

வேயிருஞ் சாரல் வியலிரு ஞாலம்சூழ் *

மாயிருஞ் சோலை மலை


81   பூதத்தாழ்வார் – இரண்டாம் திருவந்தாதி – 54

வெற்பென் றிருஞ்சோலை வேங்கடமென் றிவ்விரண்டும் *

நிற்பென்று நீமதிக்கும் நீர்மைபோல் * நிற்பென்

றுளங்கோயி லுள்ளம்வைத் துள்ளினேன் * வெள்ளத்

திளங்கோயில் கைவிடேல் என்று


82   பேயாழ்வார் – மூன்றாம் திருவந்தாதி – 61

** பண்டெல்லாம் வேங்கடம் பாற்கடல் வைகுந்தம் *

கொண்டங் குறைவார்க்குக் கோயில்போல் * வண்டு

வளங்கிளரும் நீள்சோலை வண்பூங் கடிகை *

இளங்குமரன் றன்விண் ணகர்


83   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 2.10.1

** கிளரொளியிளமை கெடுவதன்முன்னம் *

வளரொளிமாயோன் மருவியகோயில் *

வளரிளம்பொழில்சூழ் மாலிருஞ்சோலை *

தளர்விலராகில் சார்வதுசதிரே


84   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 2.10.2

சதிரிளமடவார் தாழ்ச்சியை மதியாது *

அதிர்க்குரல்சங்கத் தழகர்தம்கோயில் *

மதிதவழ்குடுமி மாலிருஞ்சோலை *

பதியதுவேத்தி யெழுவதுபயனே


85   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 2.10.3

பயனல்லசெய்து பயனில்லை நெஞ்சே *

புயல்மழைவண்ணர் புரிந்துறைகோயில் *

மயல்மிகுபொழில்சூழ் மாலிருஞ்சோலை *

அயன்மலையடைவது அதுகருமமே


86   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 2.10.4

கரும வன் பாசம் கழித்து உர்ன்று உய்யவே *

பெருமலை எடுத்தான் பீடு உறை கோயில் *

வரு மழை தவழும் மாலிருஞ்சோலைத் *

திருமலை அதுவே அடைவது திறமே


87   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 2.10.5

திறமுடைவலத்தால் தீவினைபெருக்காது *

அறமுயலாழிப் படையவன் கோயில் *

மறுவில் வண்சுனைசூழ் மாலிருஞ்சோலை *

புறமலைசாரப் போவதுகிறியே


88   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 2.10.6

கிறியெனநினைமின் கீழ்மைசெய்யாதே *

உறியமர்வெண்ணெய் உண்டவன்கோயில் *

மறியொடுபிணைசேர் மாலிருஞ்சோலை *

நெறிபடவதுவே நினைவதுநலமே


89   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 2.10.7

நலமெனநினைமின் நரகழுந்தாதே *

நிலமுனமிடத்தான் நீடுறைகோயில் *

மலமறுமதிசேர் மாலிருஞ்சோலை *

வலமுறையெய்தி மருவுதல்வலமே


90   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 2.10.8

வலஞ்செய்து வைகல் வலம் கழியாதே *

வலஞ்செய்யும் ஆய – மாயவன் கோயில் *

வலஞ்செய்யும் வானோர் மாலிருஞ்சோலை *

வலஞ்செய்து நாளும் மருவுதல் வழக்கே


91   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 2.10.9

சூதென்றுகளவும் சூதும்செய்யாதே *

வேதமுன்விரித்தான் விரும்பியகோயில் *

மாதுறுமயில்சேர்மாலிருஞசோலை *

போதவிழ்மலையே புகுவதுபொருளே


92   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 2.10.10

சூது என்று களவும் சூதும் செய்யாதே *

வேதம் முன் விரித்தான் விரும்பிய கோயில் *

மாது உறு மயில் சேர் மாலிருஞ் சோலைப் *

போது அவிழ் மலையே, புகுவது பொருளே


93   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 2.10.11

** பொருள் என்று இவ் உலகம் படைத்தவன் புகழ்மேல் *

மருள் இல் வண் குருகூர் வண் சடகோபன் *

தெருள் கொள்ளச் சொன்ன ஓர் ஆயிரத்துள் இப் பத்து *

அருளுடையவன் – தாள் அணைவிக்கும் முடித்தே


94   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 3.1.1

** முடிச்சோதி யாயுனது முகச்சோதி மலந்ததுவோ *

அடிச்சோதி நீநின்ற தாமரையாய் அலர்ந்ததுவோ *

படிச்சோதி யாடையொடும் பல்கலனாய் * நின்பைம்பொன்

கடிச்சோதி கலந்ததுவோ திருமாலே கட்டுரையே


95   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 3.1.2

கட்டுரைக்கில் தாமரைநின் கண்பாதம் கையொவ்வா *

கட்டுரைத்த நன் பொன்னுள் திருமேனி ஒளி ஒவ்வாது *

ஒட்டுரைத்திவ் வுலகுன்னைப் புகழ்வெல்லாம் பெரும்பாலும் *

பட்டுரையாய்ப் புற்கென்றே காட்டுமால் பரஞ்சோதீ


96   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 3.1.3

பரஞ்சோதி நீபரமாய் நின்னிகழ்ந்து பின் * மற்றோர்

பரஞ்சோதி யின்மையில் படியோவி நிகழ்கின்ற *

பரஞ்சோதி நின்னுள்ளே படருலகம் படைத்த * எம்

பரஞ்சோதி கோவிந்தா! பண்புரைக்க மாட்டேனே


97   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 3.1.4

மாட்டாதே யாகிலுமிம் மலர்தலைமா ஞாலம் *

நின் மாட்டாய மலர்ப்புரையும் திருவுருவும் மனம்வைக்க *

மாட்டாத பலசமய மதிகொடுத்தாய் * மலர்த்துழாய்

மாட்டேநீ மனம்வைத்தாய் மாஞாலம் வருந்தாதே


98   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 3.1.5

வருந்தாத அருந்தவத்த மலர்க்கதிரின் சுடருடம்பாய் *

வருந்தாத ஞானமாய் வரம்பின்றி முழுதியன்றாய் *

வருங்காலம் நிகழ்காலம் கழிகால மாய் * உலகை

ஒருங்காக அளிப்பாய்சீர் எங்குலக்க ஓதுவனே


99   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 3.1.6

ஓதுவார் ஓத்தெல்லாம் எவ்வுலகத் தெவ்வெவையும் *

சாதுவாய் நின்புகழின் தகையல்லால் பிறிதில்லை *

போதுவாழ் புனந்துழாய் முடியினாய் * பூவின்மேல்

மாதுவாழ் மார்ப்பினாய்என்சொல்லியான் வாழ்த்துவனே


100   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 3.1.7

வாழ்த்துவார் பலராக நின்னுள்ளே நான்முகனை *

மூழ்த்தநீ ருலகெல்லாம் படையென்று முதல்படைத்தாய் *

கேழ்த்தசீ ரரன்முதலாக் கிளர்தெய்வ மாய்க்கிளர்ந்து *

சூழ்த்தமரர் துதித்தாலுன் தொல்புகழ்மா சூணாதே


101   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 3.1.8

மாசூணாச் சுடருடம்பாய் மலராது குவியாது *

மாசூணா ஞானமாய் முழுதுமாய் முழுதியன்றாய் *

மாசூணா வான்கோலத் தமரர்க்கோன் வழிபட்டால் *

மாசூணா உன்பாத மலர்சோதி மழுங்காதே


102   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 3.1.9

மழுங்காத வைந்நுதிய சக்கரநல் வலத்தையாய் *

தொழுங்காதல் களிறளிப்பான் புள்ளூர்ந்து தோன்றினையே *

மழுங்காத ஞானமே படையாக * மலருலகில்

தொழும்பாயார்க் களித்தாலுன் சுடர்ச்சோதி மறையாதே


103   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 3.1.10

மறையாய நால்வேதத் துள்நின்ற மலர்சுடரே *

முறையாலிவ் வுலகெல்லாம் படைத்திடந்துண் டுமிழ்ந்தளந்தாய் *

பிறையேறு சடையானும் நான்முகனும் இந்திரனும் *

இறையாதல் அறிந்தேத்த வீற்றிருத்தல் இதுவியப்பே


104   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 3.1.11

** வியப்பாய வியப்பில்லா மெய்ஞ்ஞான வேதியனை *

சயப்புகழார் பலர்வாழும் தடங்குருகூர் சடகோபன் *

துயக்கின்றித் தொழுதுரைத்த ஆயிரத்து ளிப்பத்தும் *

உயக்கொண்டு பிறப்பறுக்கும் ஒலிமுந்நீர் ஞாலத்தே


105   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 3.2.1

** முந்நீர் ஞாலம் படைத்தவெம் முகில்வண்ணனே *

அந்நாள்நீ தந்த ஆக்கையின் வழியுழல்வேன் *

வெந்நாள்நோய் வீய வி னைகளைவேர் அறப்பாய்ந்து *

எந்நாள்யான் உன்னை இனிவந்து கூடுவனே


106   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 3.2.2

வன்மா வையம் அளந்த எம் வாமனா * நின்

பன்மா மாயப் பல்பிறவியில் படிகின்றயான் *

தொன்மா வல்வினைத் தொடர்களை முதலரிந்து *

நின்மாதாள் சேர்ந்து நிற்பதெஞ் ஞான்றுகொலோ


107   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 3.2.3

கொல்லா மாக்கோல் கொலைசெய்து பாரதப்போர் *

எல்லாச் சேனையும் இருநிலத் தவித்தவெந்தாய் *

பொல்லா ஆக்கையின் புணர்வினை அறுக்கலறா *

சொல்லாய்யா னுன்னைச் சார்வதோர் சூழ்ச்சியே


108   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 3.2.4

சூழ்ச்சி ஞானச் சுடரொளி யாகி * என்றும்

ஏழ்ச்சிக்கே டின்றி எங்கணும் நிறைந்தவெந்தாய் *

தாழ்ச்சிமற் றெங்கும் தவிர்ந்துநின் தாளிணக்கீழ்

வாழ்ச்சி * யான் சேரும் வகையருளாய் வந்தே


109   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 3.2.5

வந்தாய்போ லேவந்தும் என்மனத் தினைநீ *

சிந்தாமல் செய்யாய் இதுவே யிதுவாகில் *

கொந்தார்க்கா யாவின் கொழுமலர்த் திருநிறத்த

எந்தாய் * யானுன்னை எங்குவந் தணுகிற்பனே


110   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 3.2.6

கிற்பன் கில்லேன் என்றிலன் முனநாளால் *

அற்பசா ரங்கள் அவைசுவைத் தகன்றொழிந்தேன் *

பற்பல் லாயிரம் உயிர்செய்த பரமா * நின்

நற்பொற்சோ தித்தாள் நணுகுவ தெஞ்ஞான்றே


111   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 3.2.7

எஞ்ஞான்று நாமிருந் திருந்திரங்கி நெஞ்சே *

மெய்ஞ்ஞான மின்றி வினையியல் பிறப்பழுந்தி *

எஞ்ஞான்றும் எங்கும் ஒழிவற நிறைந்துநின்ற *

மெய்ஞ்ஞானச் சோதிக் கண்ணனை மேவுதுமே


112   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 3.2.8

மேவு துன்ப வினைகளை விடுத்துமிலேன் *

ஓவுதலின்றி உன்கழல் வணங்கிற்றிலேன் *

பாவுதொல் சீர்க்கண்ணா என் பரஞ்சுடரே *

கூவுகின்றேன் காண்பான் எங்கொய்தக் கூவுவனே


113   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 3.2.9

கூவிக்கூவிக் கொடுவினைத் தூற்றுள் நின்று *

பாவியேன் பலகாலம் வழிதிகைத் தலமர்க்கின்றேன் *

மேவியன் றாநிரை காத்தவ னுலகமெல்லாம் *

தாவிய அம்மானை எங்கினித் தலைப்பெய்வனே


114   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 3.2.10

தலைப்பெய் காலம் நமன்தமர் பாசம்விட்டால் *

அலைப்பூ ணுண்ணுமவ் வல்லலெல் லாமகல *

கலைப்பல் ஞானத்தென் கண்ணனைக் கண்டுகொண்டு *

நிலைப்பெற்றென் னெஞ்சம் பெற்றது நீடுயிரே


115   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 3.2.11

** உயிர்க ளெல்லா உலகமு முடையவனை *

குயில்கொள் சோலைத் தென்குருகூர்ச் சடகோபன் *

செயிரில்சொல் இசைமாலை ஆயிரத்து ளிப்பத்தும் *

உயிரின்மே லாக்கை ஊனிடை ஒழிவிக்குமே


116   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 10.7.1

** செங்சொற் கவிகாள் உயிர்காத்தாட் செய்மின் திருமா லிருஞ்சோலை *

வஞ்சக் கள்வன் மாமாயன் மாயக் கவியாய் வந்து * என்

நெஞ்சு முயிரு முள் கலந்து நின்றார் அறியா வண்ணம் * என்

நெஞ்சு முயிரும் அவைடுண்டு தானே யாகி நிறைந்தானே


117   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 10.7.2

தானே யாகி நிறைந்தெல்லா உலகும் உயிரும் தானேயாய் *

தானே யானென் பானாகித் தன்னைத் தானே துதித்து * எனக்குத்

தேனே பாலே கன்னலே அமுதே திருமாலிருஞ்சோலை *

கோனே யாகி நின்றொழிந்தான் என்னை முற்றும் உயிருண்டே


118   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 10.7.3

என்னை முற்றும் உயிருண்டென் மாய ஆக்கை யிதனுள்புக்கு *

என்னை முற்றும் தானேயாய் நின்ற மாய அம்மான் சேர் *

தென்னன் திருமா லிருஞ்சோலைத் திசைகை கூப்பிச் தேர்ந்தயான் *

இன்னம் போவே னேகொலோ எங்கொல் அம்மான் திருவருளே


119   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 10.7.4

என்கொல் அம்மான் திருவருள்கள்? உலகும் உயிரும் தானேயாய் *

நன்கென் னுடலம் கைவிடான் ஞாலத் தூடே நடந்துழக்கி *

தென்கொள் திசைக்குத் திலதமாய் நின்ற திருமாலிருஞ்சோலை *

நங்கள் குன்றம் கைவிடான் நண்ணா அசுரர் நலியவே


120   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 10.7.5

நண்ணா அசுரர் நலிவெய்த நல்ல அமரர் பொலிவெய்த *

எண்ணா தனகள் எண்ணும்நன் முனிவ ரின்பம் தலைசிறப்ப *

பண்ணார் பாடல் இன்கவிகள் யானாய்த் தன்னைத் தான்பாடி *

தென்னா வென்னும் என்னம்மான் திருமாலிருஞ்சோலையானே


121   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 10.7.6

திருமாலிருஞ்சோலையானே ஆகிச் செழுமூ வுலகும் * தன்

ஒருமா வயிற்றி னுள்ளேவைத்து ஊழி யூழி தலையளிக்கும் *

திருமாலென்னை யாளுமால் சிவனும் பிரமனும்காணாது *

அருமா லெய்தி யடிபரவ அருளை யீந்த அம்மானே


122   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 10.7.7

அருளை ஈயென் அம்மானே என்னும் முக்கண் அம்மானும் *

தெருள்¦ காள் பிரமன் அம்மானும் தேவர் கோனும் தேவரும் *

இருள்கள் கடியும் முனிவரும் ஏத்தும் அம்மான் திருமலை *

மருள்கள் கடியும் மணிமலை திருமாலிருஞ்சோலைமலையே


123   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 10.7.8

** திருமாலிருஞ்சோலைமலையே திருப்பாற் கடலே என்தலையே *

திருமால்வைகுந்தமே தண் திருவேங்கடமே எனதுடலே *

அருமா மாயத் தெனதுயிரே மனமே வாக்கே கருமமே *

ஒருமா நொடியும் பிரியான் என் ஊழி முதல்வன் ஒருவனே


124   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 10.7.9

ஊழி முதல்வன் ஒருவனே என்னும் ஒருவன் உலகெல்லாம் *

ஊழி தோறும் தன்னுள்ளே படைத்துக் காத்துக் கெடுத்துழலும் *

ஆழி வண்ணன் என்னம்மான் அந்தண் திருமாலிருஞ்சோலை *

வாழி மனமே கைவிடேல் உடலும் உயிரும் மங்கவொட்டே


125   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 10.7.10

மங்க வொட்டுன் மாமாயை திருமாலிருஞ்சோலைமேய *

நங்கள் கோனே யானேநீ யாகி யென்னை யளித்தானே *

பொங்கைம் புலனும் பொறியைந்தும் கருமேந்திரியும் ஐம்பூதம் *

இங்கு இவ்வுயிரேய் பிரகிருதி மானாங்கார மனங்களே


126   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 10.7.11

** மானாங்கார மனம்கெட ஐவர் வன்கை யர்மங்க *

தானாங்கார மாய்ப்புக்குத் தானே தானே யானானை *

தேனாங் காரப் பொழில்குருகூர்ச் சடகோபன்சொல்லாயிரத்துள் *

மானாங்காரத்திவைபத்தும் திருமாலிருங்சோலைமலைக்கே


127   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 10.8.1

** திருமாலிருஞ்சோலை மலைமென்றேன் என்ன *

திருமால்வந்து என் நெஞ்சு நிறையப் புகுந்தான் *

குருமா மணியுந்து புனல்பொன்னித் தென்பால் *

திருமால்சென்று சேர்விடம் தென் திருப்பேரே


128   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 10.8.6

திருப்பேர் நகரான் திருமாலிருஞ்சோலைப் *

பொருப்பே யுறைகின் றபிரானின்றுவந்து *

இருப்பேன் என் றென்னேஞ்சு நிறையப் புகுந்தான் *

விருப்பே பெற்றமு த முண்டு களித்தேனே