079-ThiruMoghur


Thiru Moghur ( Sri Kaalamegha Perumal Temple )

Azhwar Paasuram Count
திருமங்கையாழ்வார் சிறிய திருமடல் 1
நம்மாழ்வார் திருவாய்மொழி 11
Total 12

1   திருமங்கையாழ்வார் – சிறிய திருமடல் – 74

சீராரும் மாலிரும் சோலை திரு மோகூர் *

பாரோர் புகழும் வதரி வடமதுரை


2   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 10.1.1

** தாள தாமரைத் தடமணி வயல் திருமோகூர் *

நாளும் மேவிநன் கமர்ந்துநின் றசுரரைத் தகர்க்கும் *

தோளும் நான்குடைச் சுரிகுழல் கமலக்கண் கனிவாய் *

காள மேகத்தை யன் றிமற் றொன்றிலம் கதியே


3   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 10.1.2

இலங்கதி மற்றொன் றெம்மைக்கும் ஈன்தண் துழாயின் *

அலங்கலங் கண்ணி ஆயிரம் பேருடை அம்மான் *

நலங்கொள் நான்மறை வாணர்கள் வாழ்திரு மோகூர் *

நலங்க ழலவன் அடிநிழல் தடமன்றி யாமே


4   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 10.1.3

அன்றி யாம் ஒரு புகலிடம் இலம் என்று என்று அலற்றி *

நின்று நான்முகன் அரனொடு தேவர்கள் நாட *

வென்று இம் மூவுலகு அளித்து உழல்வான் திருமோகூர் *

நன்று நாம் இனி நணுகுதும் நமது இடர் கெடவே


5   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 10.1.4

இடர்கெட எம்மைப் போந்தளி யாய் என்றென் றேத்தி *

சுடர்கொள் சோதியைத் தேவரும் முனிவரும் தொடர *

படர்கொள் பாம்பணைப் பள்ளிகொள் வான்திரு மோகூர் *

இடர்கெ டவடி பரவுதும் தொண்டீர் வம்மினே


6   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 10.1.5

தொண்டீர்! வம்மின் நம்சுடரொளி யொருதனி முதல்வன் *

அண்ட மூவுல களந்தவன் அணிதிரு மோகூர் *

எண்டி சையுமீன் கரும்பொடு பொருஞ்செந்நெல் விளைய *

கொண்ட கோயிலை வலஞ்செய்திங் காடுதும் கூத்தே


7   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 10.1.6

கூத்தன் கோவலன் குதற்றுவல் லசுரர்கள் கூற்றம் *

ஏத்தும் நங்கட்கும் அமரர்க்கும் முனிவர்க்கும் இன்பன் *

வாய்த்த தண்பணை வளவயல் சூழ்திரு மோகூர் *

ஆத்தன் தாமரை யடியன்றி மற்றிலம் அரணே


8   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 10.1.7

மற்றி லமரண் வான்பெரும் பாழ்தனி முதலா *

சுற்று நீர்படைத் ததன்வழித் தொன்முனி முதலா *

முற்றும் தேவரோ டுலகுசெய் வான்திரு மோகூர் *

சுற்றி நாம்வலஞ் செய்யநம் துயர்கெடும் கடிதே


9   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 10.1.8

துயர்கெ டும்கடி தடைந்துவன் தடியவர் தொழுமின் *

உயர்கொள் சோலையொண் தடமணி யொளிதிரு மோகூர் *

பெயர்கள் ஆயிர முடையவல் லரக்கர்புக் கழுந்த *

தயரதன் பெற்ற மரதக மணித்தடத் தினையே


10   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 10.1.9

மணித்த டத்தடி மலர்க்கண்கள் பவளச் செவ்வாய் *

அணிககொள் நால்தடந் தோள்தெய்வம் அசுரரை யென்றும் *

துணிக்கும் வல்லரட் டனுறை பொழில்திரு மோகூர் *

நணித்து நம்முடை நல்லரண் நாமடைந் தனமே


11   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 10.1.10

நாம டைந்தநல் லரண்தமக் கென்றுநல் லமரர் *

தீமை செய்யும்வல் லசுரரை யஞ்சிச்சென் றடைந்தால் *

காம ரூபம்கொண் டெழுந்தளிப் பான்திரு மோகூர் *

நாம மேநவின் றெண்ணுமின் ஏத்துமின் நமர்காள்


12   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 10.1.11

ஏத்து மின்நமர் காள் என்று தான்குட மாடு

கூத்தனை * குரு கூர்ச்சட கோபன்குற் றேவல் *

வாய்த்த ஆயிரத் துள்ளிவை வண்திரு மோகூர்க்கு *

ஈத்த பத்திவை யேத்தவல் லார்க்கிடர் கெடுமே