Thiruvanvandoor ( Sri Paambanaiyappa Perumal Temple )
Azhwar | Paasuram | Count |
---|---|---|
நம்மாழ்வார் | திருவாய்மொழி | 11 |
Total | 11 |
** வைகல்பூங் கழிவாய் வந்து மேயும் குருகினங்காள் *
செய்கொள் செந்நெ லுயர்திருவண்வண் டூருறையும் *
கைகொள் சக்கரத் தென்கனி வாய்பெரு மானைக்கண்டு *
கைகள் கூப்பிச் சொல்லீர் வினையாட்டியேன் காதன்மையே
காதல் மென்பெடை யோடுடன் மேயும் கருநாராய் *
வேத வேள்வி யொலிமுழங்கும் தண் டிருவண்வண்டூர் *
நாதன் ஞாலமெல் லாமுண்ட நம்பெரு மானைக்கண்டு *
பாதம் கைதொழுது பணியீ ரடியேன் திறமே
திறங்க ளாகியெங் கும்செய்களூடுழல் புள்ளினங்காள் *
சிறந்த செல்வம் மல்கு திருவண்வண் டூருறையும் *
கறங்கு சக்கரக் கைக்கனி வாய்ப்பெரு மானைக்கண்டு *
இறங்கி நீர்தொழுது பணியீரடியே னிடரே
இடரில் போகம் மூழ்கி யிணைந்தாடும் மடவன்னங்காள் *
விடலில் வேத வொலிமுழங்கும்தண் திருவண்வண்டூர் *
கடலில் மேனிப் பிரான்கண் ணணைநெடு மாலைக்கண்டு *
உடலம் நைந்தொருத் தியுரு கும் என் றுணர்த்துமினே
உணர்த்த லூட லுணர்ந்துடன் மேயும் மடவன்னங்காள் *
திணர்த்த வண்டல்கள் மேல்சங்கு சேரும் திருவண்வண்டூர் *
புணர்த்த பூந்தண் டுழாய்முடி நம்பெரு மானைக்கண்டு *
புணர்த்த கையினரா யடியேனுக்கும் போற்றுமினே
போற்றியான் இரந் தேன்புன்னை மேலுறை பூங்குயில் காள் *
சேற்றில் வாளை துள்ளும் திருவண்வண் டூருறையும் *
ஆற்ற லாழியங் கையம ரர்பெரு மானைக்கண்டு *
மாற்றங் கொண்டரு ளீர்மையல் தீர்வ தொருவண்ணமே
ஒருவண்ணம்சென்று புக்கெனக்கு ஒன்றுரை யொண்கிளியே *
செருவொண் பூம்பொழில் சூழ்செக்கர் வேலை திருவண்வண்டூர் *
கருவண்ணம் செய்யவாய் செய்யகண் செய்யகை செய்யகால் *
செருவொண் சக்கரம் சங்கடை யாளம் திருந்தக் கண்டே
திருந்தக் கண்டெனக் கொன்றுரை யாயொண் சிறுபூவாய் *
செருந்தி ஞாழல் மகிழ்புன்னை சூழ்தண் டிருவண்வண்டூர் *
பெருந்தண் தாமரைக் கண்பெரு நீண்முடி நாள்தடந்தோள் *
கருந்திண் மாமுகில் போல்திரு மேனி யடிகளையே
அடிகள் கைதொழு தலர்மேல் அசையும் அன்னங்காள் *
விடிவை சங்கொலிக் கும்திரு வண்வண் டூருறையும் *
கடிய மாயன்தன் னைக்கண்ணனை நெடு மாலைக்கண்டு *
கொடிய வல்வினை யேன்திறம் கூறுமின் வேறுகொண்டே
வேறு கொண்டும்மை யானிரந் தேன்வெறி வண்டினங்காள் *
தேறு நீர்ப்பம் பைவட பாலைத் திருவண்வண்டூர் *
மாறில் போரரக் கன்மதிள் நீறெழச் செற்றுகந்த *
ஏறுசேவக னார்க்கென்னை யுமுளள் என்மின்களே
** மின்கொள் சேர்புரி நூல்குற ளாயகல் ஞாலம்கொண்ட *
வன்கள் வனடி மேல்குரு கூர்ச்சட கோபன்சொன்ன *
பண்கொள் ஆயிரத் துள்ளிவை பத்தும் திருவண்வண்டூர்க்கு *
இன்கொள் பாடல் வல்லார் மதனர்மின் னி டையவர்க்கே