097-ThiruSingavelkunram


Thiru Singavelkunram ( Ahobilam – Sri Nava Narasimhar Temple )

Azhwar Paasuram Count
திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி 10
Total 10

1   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 1.7.1

** அங்கண்ஞாலமஞ்ச அங்கோராளரியாய் * அவுணன்

பொங்கவாகம்வள்ளுகிரால் போழ்ந்தபுனிதனிடம் *

பைங்கணானைக்கொம்புகொண்டு பத்திமையால் * அடிக்கீழ்ச்

செங்கணாளியிட்டிறைஞ்சும் சிங்கவேள்குன்றமே


2   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 1.7.2

அலைத்தபேழ்வாய் வாளெயிற்றோர்க்கோளரியாய் * அவுணன்

கொலைக்கையாளன்நெஞ்சிடந்த கூருகிராளனிடம் *

மலைத்தசெல்சாத்தெறிந்தபூசல் வன்துடிவாய்கடுப்ப *

சிலைக்கைவேடர்த்தெழிப்பறாத சிங்கவேள்குன்றமே


3   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 1.7.3

ஏய்ந்தபேழ்வாய் வாளெயிற்றோர்க்கோளரியாய் * அவுணன்

வாய்ந்தவாகம்வள்ளுகிரால் வகிர்ந்தவம்மானதனிடம் *

ஓய்ந்தமாவுமுடைந்தகுன்றும் அன்றியும் நின்றழலால் *

தேய்ந்தவேயுமல்லதில்லாச் சிங்கவேள்குன்றமே


4   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 1.7.4

எவ்வம்வெவ்வேல்பொன்பெயரோன் ஏதலினின்னுயிரை

வவ்வி * ஆகம்வள்ளுகிரால் வகிர்ந்தவம்மானதிடம் *

கவ்வுநாயும்கழுகும் உச்சிபோதொடுகால்சுழன்று *

தெய்வமல்லால்செல்லவொண்ணாச் சிங்கவேள்குன்றமே


5   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 1.7.5

மென்றபேழ்வாய் வாளெயிற்றோர்க்கோளரியாய் * அவுணன்

பொன்றவாகம்வள்ளுகிரால் போழ்ந்தபுனிதனிடம் *

நின்றசெந்தீமொண்டுசூறை நீள்விசும்பூடிரிய *

சென்றுகாண்டற்கரியகோயில் சிங்கவேள்குன்றமே


6   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 1.7.6

எரிந்தபைங்கணிலங்குபேழ்வாய் எயிற்றொடிதெவ்வுருவென்று *

இரிந்துவானோர் கலங்கியோட இருந்தவம்மானதிடம் *

நெரிந்தவேயின் முழையுள்நின்று நீணெறிவாயுழுவை *

திரிந்தவானைச்சுவடுபார்க்கும் சிங்கவேள்குன்றமே


7   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 1.7.7

முனைத்தசீற்றம்விண்சுடப்போய் மூவுலகும்பிறவும் *

அனைத்துமஞ்சவாளரியாய் இருந்தவம்மானதிடம் *

கனைத்ததீயும்கல்லுமல்லா வில்லுடைவேடருமாய் *

தினைத்தனையும்செல்லவொண்ணாச் சிங்கவேள்குன்றமே


8   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 1.7.8

நாத்தழும்பநான்முகனும் ஈசனுமாய்முறையால்

ஏத்த * அங்கோராளரியாய் இருந்தவம்மானதிடம் *

காய்த்தவாகைநெற்றொலிப்பக் கல்லதர்வேய்ங்கழைபோய் *

தேய்த்ததீயால்விண்சிவக்கும் சிங்கவேள்குன்றமே


9   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 1.7.9

நல்லைநெஞ்சே நாந்தொழுதும் நம்முடைநம்பெருமான் *

அல்லிமாதர் புல்கநின்ற ஆயிரந்தோளனிடம் *

நெல்லிமல்கிக்கல்லுடைப்பப் புல்லிலையார்த்து * அதர்வாய்ச்

சில்லிசில்லென்றொல்லறாத சிங்கவேள்குன்றமே


10   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 1.7.10

** செங்கணாளிட்டிறைஞ்சும் சிங்கவேள்குன்றுடைய *

எங்களீசனெம்பிரானை இருந் தமிழ்நூல் புலவன் *

மங்கையாளன்மன்னுதொல்சீர் வண்டறை தார்க்கலியன் *

செங்கையாளன் செஞ்சொல்மாலை வல்லவர்த்தீதிலரே