Thiruvadhari Ashramam ( Badrinath – Sri Badri Narayana Perumal Temple )
Azhwar | Paasuram | Count |
---|---|---|
பெரியாழ்வார் | பெரியாழ்வார் திருமொழி | 1 |
திருமங்கையாழ்வார் | பெரிய திருமொழி | 20 |
திருமங்கையாழ்வார் | சிறிய திருமடல் | 1 |
Total | 22 |
** வடதிசை மதுரை சாளக்கி ராமம் வைகுந்தம் துவரை அயோத்தி *
இடமுடை வதரி யிடவகை யுடைய எம்புரு டோத்தம னிருக்கை *
தடவரை யதிரத் தரணிவிண் டிடியத் தலைப்பற்றிக் கரைமரம் சாடி *
கடலினைக் கலங்கக் கடுத்திழி கங்கைக் கண்டமென் னும்கடி நகரே
** முற்றமூத்துக்கோல்துணையா முன்னடிநோக்கிவளைந்து *
இற்றகால்போல்தள்ளி மெள்ள இருந்தங்கிளையாமுன் *
பெற்றதாய்போல்வந்த பேய்ச்சி பெருமுலையூடு * உயிரை
வற்றவாங்கியுண்ட வாயான் வதரிவணங்குதுமே
முதுகுபற்றிக்கைத்த லத்தால் முன்னொருகோலூன்றி *
விதிர்விதிர்த்துக்கண் சுழன்று மேற்கிளைகொண்டிருமி *
இதுவென்னப்பர் மூத்தவா றென்று இளையவரேசாமுன் *
மதுவுண்வண்டுபண்கள் பாடும் வதரிவணங்குதுமே
உறிகள்போல்மெய்ந்நரம் பெழுந்து ஊன்தளர்ந்துள்ளமெள்கி *
நெறியைநோக்கிக்கண் சுழன்று நின்றுநடுங்காமுன் *
அறிதியாகில்நெஞ்சம் அன்பா யாயிரநாமஞ்சொல்லி *
வெறிகொள்வண்டுபண்கள் பாடும் வதரிவணங்குதுமே
பீளைசோரக்கண்ணி டுங்கிப் பித்தெழமூத்திருமி *
தாள்கள் நோவத்தம்மில் முட்டித் தள்ளிநடவாமுன் *
காளையாகிக்கன்று மேய்த்துக் குன்றெடுத்தன்றுநின்றான் *
வாளைபாயும்தண்ட டஞ்சூழ் வதரிவணங்குதுமே
பண்டுகாமரான வாறும் பாவையர்வாயமுதம் *
உண்டவாறும் வாழ்ந்த வாறும் ஒக்கவுரைத்திருமி *
தண்டுகாலாவூன்றி யூன்றித் தள்ளிநடவாமுன் *
வண்டுபாடும்தண்டு ழாயான் வதரிவணங்குதுமே
எய்த்த சொல்லோ டீளையேங்கி இருமி யிளைத்துடலம் *
பித்தர்போலச் சித்தம்வேறாய்ப் பேசி யயராமுன் *
அத்தனெந்தை யாதிமூர்த்தி ஆழ்கடலைக் கடைந்த *
மைத்தசோதி யெம்பெருமான் வதரி வணங்குதுமே
பப்ப அப்பர் மூத்த ஆறு பாழ்ப்பதுசீத்திரளை
யொப்ப * ஐக்கள்போத வுந்த உன்தமர்க்காண்மினென்று *
செப்புநேர்மென்கொங்கை நல்லார் தாம்சிரியாதமுன்னம் *
வைப்பும்நங்கள்வாழ்வு மானான் வதரிவணங்குதுமே
ஈசிபோமினீங்கி ரேன்மின் இருமியிளைத்தீர் * உள்ளம்
கூசியிட்டீரென்று பேசும் குவளையங்கண்ணியர்ப்பால் *
நாசமானபாசம் விட்டு நன்னெறிநோக்கலுறில் *
வாசம்மல்குதண்டு ழாயான் வதரிவணங்குதுமே
புலன்கள்நையமெய்யில் மூத்துப் போந்திருந்துள்ளமெள்கி *
கலங்கவைக்கள்போத வுந்திக் கண்டபிதற்றாமுன் *
அலங்கலாயதண்டு ழாய்கொண்டு ஆயிரநாமம்சொல்லி *
வலங்கொள்தொண்டர்ப்பாடி யாடும் வதரிவணங்குதுமே
** வண்டுதண்டேனுண்டுவாழும் வதரிநெடுமாலை *
கண்டல்வேலிமங்கை வேந்தன் கலியனொலிமாலை *
கொண்டுதொண்டர்ப்பாடி யாடக் கூடிடில்நீள்விசும்பில் *
அண்டமல்லால்மற்ற வர்க்கு ஓராட்சியறியோமே
** ஏனமுனாகியிருநிலமிடந்து அன்றிணையடியிமையவர்வணங்க *
தானவனாகம்தரணியில்புரளத் தடஞ்சிலைகுனித்தவெந்தலைவன் *
தேனமர்சோலைக்கற்பகம்பயந்த தெய்வநன்னறுமலர்க்கொணர்ந்து *
வானவர்வணங்கும்கங்கையின்கரைமேல் வதரியாச்சிராமத்துள்ளானே
கானிடையுருவைச்சுடுசரம்துரந்து கண்டுமுங்கொடுந்தொழிலுரவோன் *
ஊனுடையகலத்தடுகணைகுளிப்ப உயிர்க்கவர்ந்துகந்தவெம்மொருவன் *
தேனுடைக்கமலத்தயனொடுதேவர் சென்றுசென்றிறைஞ்சிட * பெருகு
வானிடைமுதுநீர்க்கங்கையிங்கரைமேல் வதரியாச்சிராமத்துள்ளானே
இலங்கையும்கடலுமடலருந்துப்பின் இருநிதிக்கிறைவனும் * அரக்கர்
குலங்களும்கெடமுன் கொடுந்தொழில்புரிந்த கொற்றவன் கொழுஞ்சுடர்சுழன்ற *
விலங்கலிலுரிஞ்சிமேல்நின்றவிசும்பில் வெண்துகிற்கொடியெனவிரிந்து *
வலந்தருமணிநீர்க்கங்கையின் கரைமேல் வதரியாச்சிராமத்துள்ளானே
துணிவினியுனக்குச்சொல்லுவன்மனமே தொழுதெழுதொண்டர்கள்தமக்கு *
பிணியொழித்தமரர்ப்பெருவிசும்பருளும் பேரருளாளனெம்பெருமான் *
அணிமலர்க்குழலாரரம்பையர்துகிலும் ஆரமும்வாரிவந்து *
அணிநீர் மணிகொழித்திழிந்த கங்கையின்கரைமேல் வதரியாச்சிராமத்துள்ளானே
பேயிடைக்கிருந்துவந்தமற்றவள்தன் பெருமுலைசுவைத்திட * பெற்ற
தாயிடைக்கிருத்தலஞ்சுவனென்று தளர்ந்திட வளர்ந்தவெந்தலைவன் *
சேய்முகட்டுச்சியண்டமுஞ்சுமந்த செம்பொன்செய்விலங்கலிலிலங்கு *
வாய்முகட்டிழிந்தகங்கையின்கரைமேல் வதரியாச்சிராமத்துள்ளானே
தேரணங்கல்குல்செழுங்கையற்கண்ணி திறத்து ஒருமறத்தொழில்புரிந்து *
பாரணங்கிமிலேறேழுமுன்னடர்த்த பனிமுகில்வண்ணனெம்பெருமான் *
காரணந்தன்னால்கடும்புனல்கயத்த கருவரைபிளவெழக்குத்தி *
வாரணங்கொணர்ந்தகங்கையின்கரைமேல் வதரியாச்சிராமத்துள்ளானே
வெந்திறல்களிறும்வேலைவாயமுதும் விண்ணொடுவிண்ணவர்க்கரசும் *
இந்திரற்கருளியெமக்குமீந்தருளும் எந்தையெம்மடிகளெம்பெருமான் *
அந்தரத்தமரரடியிணைவணங்க ஆயிரமுகத்தினாலருளி *
மந்தரத்திழிந்தகங்கையின்கரைமேல் வதரியாச்சிராமத்துள்ளானே
மான்முனிந்தொருகால்வரிசிலைவளைத்த மன்னவன்பொன்னிறத்துரவோன் *
ஊன்முனிந்தவனதுடலிருபிளவா உகிர்நுதிமடுத்து * அயனரனைத்
தான்முனிந்திட்ட வெந்திறல்சாபம் தவிர்த்தவன் * தவம்புரிந்துயர்ந்த
மாமுனிகொணர்ந்தகங்கையின்கரைமேல் வதரியாச்சிராமத்துள்ளானே
கொண்டல்மாருதங்கள்குலவரைதொகுநீர்க் குரைகடலுலகுடனனைத்தும் *
உண்டமாவயிற்றோனொண் சுடரேய்ந்த உம்பருமூழியுமானான் *
அண்டமூடறுத்தன்றந்தரத்திழிந்து அங்கவனியாளலமர * பெருகு
மண்டுமாமணிநீர்க்கங்கையின் கரைமேல் வதரியாச்சிராமத்துள்ளானே
** வருந்திரைமணிநீர்க்கங்கையின் கரைமேல் வதரியாச்சிராமத்துள்ளானை *
கருங்கடல்முந்நீர்வண்ணனையெண்ணிக் கலியன்வாயொலிசெய்தபனுவல் *
வரஞ்செய்தவைந்துமைந்தும்வல்லார்கள் வானவருலகுடன் மருவி *
இருங்கடலுலகமாண்டுவெண்குடைக்கீழ் இமையவராகுவர்தாமே
சீராரும் மாலிரும் சோலை திரு மோகூர் *
பாரோர் புகழும் வதரி வடமதுரை