ThiruParamapadham ( Parathuvam )
Azhwar | Paasuram | Count |
---|---|---|
பெரியாழ்வார் | பெரியாழ்வார் திருமொழி | 4 |
ஆண்டாள் | திருப்பாவை | 1 |
திருமழிசை ஆழ்வார் | திருச்சந்த விருத்தம் | 1 |
திருமழிசை ஆழ்வார் | நான்முகன் திருவந்தாதி | 1 |
திருப்பாணாழ்வார் | அமலனாதிபிரான் | 1 |
திருமங்கையாழ்வார் | திருக்குறுந்தாண்டகம் | 1 |
பொய்கையாழ்வார் | முதல் திருவந்தாதி | 2 |
பேயாழ்வார் | மூன்றாம் திருவந்தாதி | 1 |
நம்மாழ்வார் | திருவிருத்தம் | 3 |
நம்மாழ்வார் | பெரிய திருவந்தாதி | 1 |
நம்மாழ்வார் | திருவாய்மொழி | 20 |
Total | 36 |
அண்டத் தமரர்கள் சூழ அத்தாணி யுள்ளங்கி ருந்தாய் *
தொண்டர்கள் நெஞ்சி லுறைவாய் தூமல ராள்மண வாளா *
உண்டிட்டு உலகினை யேழும் ஓரா லிலையில் துயில்கொண்டாய் *
கண்டுநான் உன்னை யுகக்கக் கருமுகைப் பூச்சூட்ட வாராய்
வானிள வரசு வைகுந்தக் குட்டன் வாசுதே வன்மது ரைமன்னன் * நந்த
கோனிள வரசு கோவலர் குட்டன் கோவிந்தன் குழல்கொடு ஊதின போது *
வானிளம் படியர் வந்துவந் தீண்டி மனமுரு கிமலர்க் கண்கள் பனிப்ப *
தேனள வுசெறி கூந்த லவிழச் சென்னிவேர்ப் பச்செவி சேர்த்துநின் றனரே
** வடதிசை மதுரை சாளக்கி ராமம் வைகுந்தம் துவரை அயோத்தி *
இடமுடை வதரி யிடவகை யுடைய எம்புரு டோத்தம னிருக்கை *
தடவரை யதிரத் தரணிவிண் டிடியத் தலைப்பற்றிக் கரைமரம் சாடி *
கடலினைக் கலங்கக் கடுத்திழி கங்கைக் கண்டமென் னும்கடி நகரே
** தடவரைவாய் மிளிர்ந்துமின்னும் தவளநெடுங் கொடிபோல் *
சுடரொளியாய் நெஞ்சினுள்ளே தோன்றும்என் சோதிநம்பீ *
வடதடமும் வைகுந்தமும் மதிள்துவ ராபதியும் *
இடவகைகள் இகழ்ந்திட்டுஎன்பால் இடவகை கொண்டனையே
தூமணி மாடத்து சுற்றும் விளக்கெரியத் * தூபம் கமழத் துயிலணைமேல் கண்வளரும் *
மாமான் மகளே மணிக்கதவம் தாழ்திறவாய் * மாமீர் அவளை எழுப்பீரோ உன்மகள்தான் *
ஊமையோ அன்றி செவிடோ அனந்தலோ * ஏமப் பெருந்துயில் மந்திரப் பட்டாளோ *
மாமாயன் மாதவன் வைகுந்தன் என்றென்று * நாமம் பலவும் நவின்றேலோர் என்பாவாய்
மண்ணுளாய்கொல் விண்ணுளாய்கொல் மண்ணுளேம யங்கிநின்று *
எண்ணுமெண்ண கப்படாய்கொல் என்னமாயைநின்தமர் *
கண்ணுளாய்கொல் சேயைகொல்அ னந்தன்மேல்கி டந்தவெம்
புண்ணியா * புனந்துழாய லங்கலம்பு னிதனே
** ஏன்றேன் அடிமை இழிந் தேன் பிறப்பிடும்பை *
ஆன்றேன் அமரர்க் கமராமை * ஆன்றேன்
கடன்நாடும் மண்ணாடும் கைவிட்டு * மேலை
இடநாடு காண இனி
** அமல னாதிபிரா னடியார்க் கென்னை யாட்படுத்த
விமலன் * விண்ணவர் கோன்விரை யார்பொழில் வேங்கடவன் *
நிமலன் நின்மலன் நீதிவானவன் நீள்மதி ளரங்கத் தம்மான் * திருக்
கமலபாதம்வந் தென்கண்ணி னுள்ளன வொக்கின்றதே
தொண்டெல்லாம் பரவி நின்னைத் தொழுதடி பணியு மாறு
கண்டு * தான் கவலை தீர்ப்பான் ஆவதே பணியா யெந்தாய் *
அண்டமா யெண்டி சைக்கும் ஆதியாய் நீதி யான *
பண்டமாம் பரம சோதி நின்னையே பரவு வேனே
உணர்வாரா ருன்பெருமை யூழிதோ றூழி *
உணர்வாரா ருன்னுருவந் தன்னை * உணர்வாரார்
விண்ணகத்தாய் மண்ணகத்தாய் வேங்கடத்தாய் * நால்வேதப்
பண்ணகத்தாய் நீகிடந்த பால்
வேங்கடமும் விண்ணகரும் வெஃகாவும் * அஃகாத
பூங்கிடங்கில் நீள்கோவல் பொன்னகரும் * நான்கிடத்தும்
நின்றா னிருந்தான் கிடந்தான் நடந்தானே *
என்றால் கெடுமாம் இடர்
** பண்டெல்லாம் வேங்கடம் பாற்கடல் வைகுந்தம் *
கொண்டங் குறைவார்க்குக் கோயில்போல் * வண்டு
வளங்கிளரும் நீள்சோலை வண்பூங் கடிகை *
இளங்குமரன் றன்விண் ணகர்
உண்ணா துறங்கா துணர்வுறும் எத்தனை யோகியர்க்கும் *
எண்ணாய் மிளிரும் இயல்பின வாம் * எரி நீர்வளிவான்
மண்ணா கியவெம் பெருமான் றனதுவை குந்தமன்னாள்
கண்ணாய் அருவினை யேன் * உயி ராயின காவிகளே
மலர்ந்தே யொழிலிந்தில மாலையும் மாலைபொன் வாசிகையும் *
புலந்தோய் தழைப்பந்தர் தண்டுற நாற்றி * பொருகடல்சூழ்
நிலந்தா வியவெம் பெருமான் தனதுவை குந்தமன்னாய்
கலந்தார் வரவெதிர் கொண்டு * வன் கொன்றைகள் கார்த்தனவே
உலாகின்ற கெண்டை ஒளியம்பு * எம்ஆவியை ஊடுருவக்
குலாகின்ற வெஞ்சிலை வாண்முகத்தீர் * குனிசங்கிடறிப்
புலாகின்ற வேலைப் புணரியம் பள்ளியம் மானடியார்
நிலாகின்ற வைகுந்தமோ * வையமோ நும்நிலையிடமே
கல்லும் கனைகடலும் வைகுந்த வானாடும் *
புல்லென் றழிந் தனகொல் ஏபாவம் * வெல்ல
நெடியான் நிறங்கரியான் உள்புகுந்து நீங்கான் *
அடியேன துள்ளத் தகம்
புலனைந்துமேயும் பொறியைந்துநீக்கி *
நலமந்தமில்லதோர் நாடுபுகுவீர் *
அலமந்துவீய வசுரரைச்செற்றான் *
பலமுந்துசீரில் படிமினோவாதே
இடரின்றி யேயொரு நாளொரு போழ்திலெல் லாவுல கும்கழிய *
படர்ப்புகழ்ப் பார்த்தனும் வைதிக னுமுடன் ஏறத்திண் தேர்க்கடவி *
சுடரொளி யாய்நின்ற தன்னுடைச் சோதியில் வைதிகன் பிள்ளைகளை *
உடலொடும் கொண்டு கொடுத்தவ னைப்பற்றி ஒன்றும் துயரிலனே
** மண்ணை இருந்து துழாவி வாமனன் மண் இது என்னும் *
விண்ணைத் தொழுது அவன் மேவு வைகுந்தம் என்று கை காட்டும் *
கண்ணை உள்நீர் மல்க நின்று கடல்வண்ணன் என்னும் அன்னே * என்
பெண்ணைப் பெருமயல் செய்தாற்கு என் செய்கேன் பெய் வளையீரே
வைகுந்த நாதனென் வல்வினை மாய்ந்தறச் *
செய்குந்தன் றன்னையென் னாக்கியென் னால்தன்னை *
வைகுந்த னாகப் புகழ்வண் தீங்கவி *
செய்குந்தன் தன்னையெந் நாள்சிந்தித் தார்வனோ
இடையில் லையான் வளர்த்த கிளிகாள் பூவைகள் காள்குயில் காள்!ம யில்காள் *
உடையநம் மாமையும் சங்கும் நெஞ்சும் ஒன்றும் ஒழியவொட் டாது கொண்டான் *
அடையும் வைகுந்த மும்பாற் கடலும் அஞ்சன வெற்பும் அவை நணிய *
கடையறப் பாசங்கள் விட்ட பின்னை அன்றி யவனவை காண்கொ டானே
ஆகம்சேர் நரசிங்கமதாகி * ஓர்
ஆகம்வள்ளுகிரால் பிளந்தானுறை *
மாகவைகுந்தம் காண்பதற்கு * என்மனம்
ஏகமெண்ணு மிராப்பகவின்றியே
தெளிவிசும்புகடிதோடித் தீவளைத்துமின்னிலகும் *
ஒளிமுகில்காள திருமுழிக்களத்துளையுமொண்சுடர்க்கு *
தெளி விசும்புதிருநாடாத் தீவினையேன்மனத்துறையும் *
துளிவார்கட்குழலார்க்கு என்தூதுரைத்தல் செப்புமினே
** திருமாலிருஞ்சோலைமலையே திருப்பாற் கடலே என்தலையே *
திருமால்வைகுந்தமே தண் திருவேங்கடமே எனதுடலே *
அருமா மாயத் தெனதுயிரே மனமே வாக்கே கருமமே *
ஒருமா நொடியும் பிரியான் என் ஊழி முதல்வன் ஒருவனே
எளிதா யினவாறென் றெங்கண்கள் களிப்ப *
களிதா கியசிந் தையனாய்க் களிக்கின்றேன் *
கிளிதா வியசோழைகள் சூழ்திருப் பேரான் *
தெளிதா கியசேண் விசும்புதரு வானே
** சூழ்விசும் பணிமுகில் தூரியம் முழக் கின *
ஆழ்கடல் அலைதிரை கையெடுத் தாடின *
ஏழ்பொழி லும்வளம் ஏந்திய என்னப்பன் *
வாழ்புகழ் னாரணன் தமரைக்ககண் டுகந்தே
நாரணன் தமரைக்கண் டுகந்துநன் னீர்முகில் *
பூரண பொற்குடம் பூரித் த துயர்விண்ணில் *
நீரணி கடல்கள்நின் றார்த்தன * நெடுவரைத்
தோரணம் நிரைத்தெங்கும் தொழுதனர் உலகரே
தொழுதனர் உலகர்கள் தூபநல் மலர்மழை
பொழிவனர் * பூழியன் றளந்தவன் தமர்முன்னே *
எழுமின் என் றிமருங்கிசைத்தனர் முனிவர்கள் *
வழியிது வைகுந்தற் கென்றுவந் தெதிரே
எதிரெதிரி இமையவர் இருப்பிடம் வகுத்தனர் *
கதிரவர் அவரவர் கைந்நிரை காட்டினர் *
அதிரிகுரல் முரசங்கள் அலைகடல் முழக்கொத்த *
மதுவிரி துழாய்முடி மாதவன் தமர்க்கே
மாதவன் தமரென்று வாசலில் வானவர் *
போதுமின் எமதிடம் புகுதுக வென்றலும் *
கீதங்கள் பாடினர் கின்னரர் கெருடர்கள் *
வேதநல்வாயவர் வேள்ளியுள் மடுத்தே
வேள்வியுள் மடுத்தலும் விரைகமழ் நறும்புகை * காளங்
கள் வலம்புரி கலந் தெங்கும் இசைத்தனர் *
ஆளுமிங்கள் வானகம் ஆழியான் தமர் என்று *
வாளொண்கண் மடந்தையர் வாழ்த் தினர் மகிழ்ந்தே
மடந்தையர் வாழ்த்தலும் மருதரும் வசுக்களும் *
தொடர்ந்தெங்கும் தோத்திரம் சொல்லினர் * தொடுகடல்
கிடந்தவென் கேசவன் கிளரொளி மணிமுடி *
குடந்தையென் கோவலன் குடியடி யார்க்கே
குடியடி யாரிவர் கோவிந்தன் தனக்கென்று *
முடியுடை வானவர் முறைமுறை எதிரிகொள்ள *
கொடியணி நெடுமதிள் கோபுரம் குறுகினர் *
வடிவுடை மாதவன் வைகுந்தம் புகவே
வைகுந்தம் புகுதலும் வாசலில் வானவர் *
வைகுந்தன் தமரெமர் எமதிடம் புகுதென்று *
வைகுந்தத் தமரரும் முனிவரும் வியந் தனர் *
வகுந்தம் புகுவது மண்ணவர் விதியே
விதிவகை புகுந்தனர் என்றுநல் வேதியர் *
பதியினில் பாங்கினில் பாதங்கள் கழுவினர் *
நிதியுநற் சுண்ணமும் நிறைகுட விளக்கமும் *
மதிமுக மடந்தயர் ஏந்தினர் வந்தே
** வந்தவர் எதிரிகொள்ள மாமணி மண்டபத்து *
அந்தமில் பேரின்பத் தடியரோ டிருந்தமை *
கொந்தலர் பொழில்குரு கூர்ச்சட கோபன் * சொல்
சந்தங்கள் ஆயிரத் திவைவல்லார் முனிவரே