Thondaradippodialwar_Thirupalliyezhuchi


தொண்டரடிப் பொடியாழ்வார் – திருப்பள்ளியெழுச்சி

Azhwar Paasuram Count Media
தொண்டரடிப் பொடியாழ்வார் திருப்பள்ளியெழுச்சி 10
Total 10

1   தொண்டரடிப் பொடியாழ்வார் – திருப்பள்ளியெழுச்சி – 1

** கதிரவன் குணதிசைச் சிகரம்வந் தணைந்தான் கனவிரு ளகன்றது காலையம் பொழுதாய் *

மதுவிரிந் தொழுகின மாமல ரெல்லாம் வானவ ரரசர்கள் வந்துவந் தீண்டி *

எதிர்திசை நிறைந்தன ரிவரொடும் புகுந்த இருங்களிற் றீட்டமும் பிடியொடு முரசும் *

அதிர்தலி லலைகடல் போன்றுள தெங்கும் அரங்கத்தம் மாபள்ளி யெழுந்தரு ளாயே

   

2   தொண்டரடிப் பொடியாழ்வார் – திருப்பள்ளியெழுச்சி – 2

கொழுங்கொடி முல்லையின் கொழுமல ரணவிக் கூர்ந்தது குணதிசை மாருத மிதுவோ *

எழுந்தன மலரணைப் பள்ளிகொள் ளன்னம் ஈன்பனி நனைந்தத மிருஞ்சிற குதறி *

விழுங்கிய முதலையின் பிலம்புரை பேழ்வாய் வெள்ளெயி றுறவதன் விடத்தனுக்

கனுங்கி * அழுங்கிய ஆனையி னருந்துயர் கெடுத்த அரங்கத்தம்மா பள்ளி யெழுந்தரு ளாயே

   

3   தொண்டரடிப் பொடியாழ்வார் – திருப்பள்ளியெழுச்சி – 3

சுடரொளி பரந்தன சூழ்திசை யெல்லாம் துன்னிய தாரகை மின்னொளி சுருங்கி *

படரொளி பசுத்தனன் பனிமதி யிவனோ பாயிறு ளகன்றது பைம்பொழில் கமுகின் *

மடலிடைக் கீறிவண் பாளைகள் நாற வைகறை கூர்ந்தது மாருத மிதுவோ *

அடலொளி திகழ்தரு திகிரியந் தடக்கை அரங்கத்தம்மா பள்ளியெழுந்தருளாயே

   

4   தொண்டரடிப் பொடியாழ்வார் – திருப்பள்ளியெழுச்சி – 4

மேட்டிள மேதிகள் தளைவிடு மாயர்கள் வேய்ங்குழ லோசையும் விடைமணிக் குரலும் *

ஈட்டிய இசைதிசை பரந்தன வயலுள் இருந்தின சுரும்பினம் இலங்கையர் குலத்தை *

வாட்டிய வரிசிலை வானவ ரேறே மாமுனி வேள்வியைக் காத்து * அவ பிரதம்

ஆட்டிய அடுதிறல் அயோத்தியெம் மரசே அரங்கத்தம் மாபள்ளி யெழுந்தரு ளாயே

   

5   தொண்டரடிப் பொடியாழ்வார் – திருப்பள்ளியெழுச்சி – 5

புலம்பின புட்களும் பூம்பொழில் களின்வாய் போயிற்றுக் கங்குல் புகுந்தது புலரி *

கலந்தது குணதிசை கனைகட லரவம் களிவண்டு மிழற்றிய கலம்பகம் புனைந்த *

அலங்கலந் தொடையல்கொண் டடியிணை பணிவான் அமரர்கள் புகுந்தன ராதலி லம்மா *

இலங்கையர் கோன்வழி பாடுசெய் கோயில் எம்பெரு மான்பள்ளி யெழுந்தரு ளாயே

   

6   தொண்டரடிப் பொடியாழ்வார் – திருப்பள்ளியெழுச்சி – 6

இரவியர் மணிநெடுந் தேரொடு மிவரோ இறையவர் பதினொரு விடையரு மிவரோ *

மருவிய மயிலின னறுமுக னிவனோ மருதரும் வசுக்களும் வந்துவந் தீண்டி *

புரவியோ டாடலும் பாடலும் தேரும் குமரதண் டம்புகுந் தீண்டிய வெள்ளம் *

அருவரை யனையநின் கோயில்முன் னிவரோ அரங்கத்தம்மா பள்ளி யெழுந்தரு ளாயே

   

7   தொண்டரடிப் பொடியாழ்வார் – திருப்பள்ளியெழுச்சி – 7

அந்தரத் தமரர்கள் கூட்டங்க ளிவையோ அருந்தவ முனிவரும் மருதரு மிவரோ *

இந்திர னானையும் தானும்வந் திவனோ எம்பெரு மானுன் கோயிலின் வாசல் *

சுந்தரர் நெருக்கவிச் சாதரர் நூக்க இயக்கரும் மயங்கினர் திருவடி தொழுவான் *

அந்தரம் பாரிட மில்லைமற் றிதுவோ அரங்கத்தம் மாபள்ளி யெழுந்தரு ளாயே

   

8   தொண்டரடிப் பொடியாழ்வார் – திருப்பள்ளியெழுச்சி – 8

வம்பவிழ் வானவர் வாயுறை வழங்க மாநிதி கபிலையொண் கண்ணாடி முதலா *

எம்பெரு மான்படி மக்கலம் காண்டற்கு ஏற்பன வாயின கொண்டுநன் முனிவர் *

தும்புரு நாரதர் புகுந்தன ரிவரோ தோன்றின னிரவியும் துலங்கொளி பரப்பி *

அம்பர தலத்தில்நின் றகல்கின்ற திருள்போய் அரங்கத்தம் மாபள்ளி யெழுந்தரு ளாயே

   

9   தொண்டரடிப் பொடியாழ்வார் – திருப்பள்ளியெழுச்சி – 9

** ஏதமில் தண்ணுமை யெக்கம்மத் தளியே யாழ்குழல் முழவமோ டிசைதிசை கெழுமி *

கீதங்கள் பாடினர் கின்னரர் கெருடர்கள் கந்தரு வரவர் கங்குலு ளெல்லாம் *

மாதவர் வானவர் சாரண ரியக்கர் சித்தரும் மயங்கினர் திருவடி தொழுவான் *

ஆதலி லவர்க்குநா ளோலக்க மருள அரங்கத்தம் மாபள்ளி யெழுந்தரு ளாயே

   

10   தொண்டரடிப் பொடியாழ்வார் – திருப்பள்ளியெழுச்சி – 10

** கடிமலர்க் கமலங்கள் மலர்ந்தன இவையோ கதிரவன் கனைகடல் முளைத்தனன் இவனோ *

துடியிடை யார்சுரி குழல்பிழிந் துதறித் துகிலுடுத் தேறினர் சூழ்புன லரங்கா *

தொடையொத்த துளவமும் கூடையும் பொலிந்து தோன்றிய தோள்தொண்ட ரடிப்பொடி யென்னும்

அடியனை * அளியனென் றருளியுன் னடியார்க் காட்படுத் தாய்பள்ளி எழுந்தரு ளாயே,